Main Menu

மக்களுக்குத் தேவை ரொட்டிகளே தவிர துப்பாக்கிகள் அல்ல- பாப்பரசர் பிரான்ஸிஸ்

மக்களுக்குத் தேவையானது ரொட்டிகளே தவிர துப்பாக்கிகள் அல்ல எனத் தெரிவித்துள்ள பாப்பரசர் பிரான்சிஸ், ஆயுத உற்பத்தி மற்றும் ஆயுத வர்த்தகங்களை நிறுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கத்தோலிக்கர்களின் தலைமையிடமான வத்திக்கானில் பாப்பரசர் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டரை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மிகச் சில கார்தினல்கள் மட்டுமே இந்தப் பிரார்த்தனையில் பங்கேற்றனர்.

பிரார்த்தனையின் முடிவில் பேசிய பாப்பரசர், கருக்கலைப்பு மற்றும் அப்பாவி உயிர்களைக் கொல்வது நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஆயுத உற்பத்தியையும், ஆயுத வர்த்தகத்தையும் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மேலும், கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளதால் ஏற்படும் அச்சத்திற்கு அடிபணிய வேண்டாம் என்றும் மரண நேரத்தில் வாழ்க்கையின் தூதர்களாக இருக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்று ஈஸ்ரர் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் பலநாடுகளில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள நிலையில் வீட்டுக்குள்ளேயே பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.

அத்துடன், தேவாலயங்களில் மக்கள் பிரசன்னம் இன்றி, ஒரு சில பாதிரியார்களின் பங்களிப்புடன் ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...