Main Menu

மகாத்மா காந்தி பிறந்தநாள்: கவர்னர் பன்வாரிலால்- எடப்பாடி பழனிசாமி மரியாதை

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி உருவப்படத்துக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா இன்று அரசு சார்பில் வெகு விமரிசையாக நடத்தப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே உருவப்படமும் வைக்கப்பட்டிருந்தது.

கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன். கே.பி.அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்கள், பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதில் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தீண்டாமை ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மெரினா காந்தி சிலை முன்பு இருந்து மாணவ- மாணவிகளின் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். இந்த பேரணி கிண்டி காந்தி மண்டபத்தை சென்றடைந்தது.

இன்று மாலை கிண்டி காந்தி மண்டபத்தில் பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

நிகழ்ச்சிக்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்குகிறார். அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகிக்கிறார். நிகழ்ச்சியில் செய்திதுறை சார்பில் புகைப்பட கண்காட்சியும், காந்தி பற்றிய திரைப்படமும் திரையிடப்படுகிறது. மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பகிரவும்...