Main Menu

போராட்டத்தை இடைநிறுத்துமாறு பிரான்ஸ் தேசிய ரயில்வே நிர்வாகம் ஊழியர்களிடம் கோரிக்கை!

பிரான்ஸில், அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தை கிறிஸ்மஸ் பண்டிகை விடுமுறை நாட்களை முன்னிட்டு இடைநிறுத்தம் செய்யுமாறு தேசிய ரயில்வே நிர்வாகம் தங்களது ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த போராட்டத்தினால் பிரான்ஸில் 85 வீத போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் நலன் கருதி தேசிய ரயில்வே நிறுவன தலைவர் ஜீன் பியரே ஃபரண்டாவ், இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘விடுமுறை தினங்கள் குடும்பத்தாரை சந்திப்பதற்கு முக்கியமான தருணமாகும். கிறிஸ்மஸ் பண்டிகை வரும் 25ஆம் திகதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பண்டிகையை கொண்டாடவும் தங்களது குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக இருக்கவும் பொதுமக்கள் விரும்புவர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் ரயிலில் பயணம் செய்வார்கள். அதனால் தான் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை காலங்களில் போராட்டத்தை இடைநிறுத்தி வைக்குமாறு ரயில்வே ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்’ என கூறினார்.

பிரான்ஸில் அரசின் ஓய்வூதியத் திட்ட சீர்திருத்தத்தை எதிர்த்து, தேசிய ரீதியில் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்ததற்கு அமைய, கடந்த 5ஆம் திகதி பிரான்ஸின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த போரட்டத்தில், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், பொலிஸார், விமானநிலைய ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் வீதிகளில் இறங்கி போராடினர். இந்த போராட்டத்தினால், ரயில்வே, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் என பல பொது இடங்கள் ஸ்தம்பித்து போயிருந்தன. இந்த நிலைமை தற்போது வரை முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை.

பிரான்ஸின் பல்வேறு புதிய விதிமுறைகளை ஓய்வூதிய திட்டத்துக்குள் கொண்டுவந்ததால், தற்போது ஊழியர்களிடையே பெரும் நம்பிக்கையின்மை எழுந்துள்ளது. ஓய்வூதிய வயது வரம்பு 62 இல் இருந்து 64 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தவிர, சேவைக்காலத்தை பொறுத்து ஓய்வூதியத்தின் தொகை மாறுபடும். ஓய்வூதியத்தை 64 வயதுக்கு முன்னதாக கோரினால் ஓவ்வூதியத் தொகை வேறுபடும் என பல புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...