Main Menu

பேரினவாத நாடகம் தோற்றுப்போனது – அப்துல் மனாப்

சிறுபான்மைகளாகிய தமிழ், முஸ்லிம்களிடையே பிரச்சினையை ஏற்படுத்த முனையும் பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோக வேண்டாம் என தமிழ் தரப்பினரை வேண்டுகின்றோம் அப்துல் மனாப்.

பொய்க் குற்றச் சாட்டுக்கள் மூலம் முஸ்லிம் அரசியல் தலைவர்களை பதவி துறக்க வைத்து அரங்கேற்றிய பேரினவாத நாடகம் தோற்றுப்போனது என கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப் (05) ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கல்முனையில் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அப்துல் மனாப் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் வேலைத் திட்டம் கன கச்சிதமாக இன்று பேரினவாதிகளால் அரங்கேற்றப்படுவதும் பொருளாதாரம், வாழ்வியல், ஆன்மீகத் துறையில் முஸ்லிம் சமுகம் முன்னோக்கிச் செல்வதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தடுப்பதற்கு பல்வேறுபட்ட கோணங்களில் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றது.

இலங்கையில் 30 வருட கால யுத்தம் நிறைவுக்கு வந்த பிற்பாடு, யுத்த சூழலை வைத்து அரசியல் பிளைப்பு நடாத்திய வங்குரோத்து அரசியல்வாதிகள், மீண்டும் ஒரு இருண்ட யுகத்தை முஸ்லிம்  சமுகத்தை சீண்டுவதன் மூலம் ஏற்படுத்தி அதில் அரசியல் செய்ய எத்தனிப்பது தெளிவாகிறது.

இன்றைய முஸ்லிம் சமுகத்தின் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற அனைத்து அட்டூழியங்களுக்கும் இனவாதிகளின் நிகழ்ச்சி நிரலும், அரசியல்வாதிகளின் ஆசீர்வாதமுமே பின்புலமாக இருக்கிறது. இனி நாட்டில் எப்போது தேர்தல் காலம் வருமோ அப்போது கூடவே இனவாதம், மதவாதம் முதலீடாக விதைக்கப்படும் இதற்கு அண்மைக்கால வரலாறு சான்று பகர்கிறது.

இதனை அடியொட்டிய திட்டமே முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டு பொய் என்பதை பொலிஸ் மா அதிபர் கடிதத்தின் மூலம் உறுதிப் படுத்தியது மட்டுமல்லாது, இராணுவத் தளபதியும் தனது நேரடி வாக்குமூலத்தின் மூலம் இக்குற்றச்சாட்டு பொய் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். 

அதுபோல் முன்னாள்  ஆளுநர்களான அஸாத் சாலிஹ், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புள்ளாஹ் போன்றோருக்கு எதிரான குற்றச் சாட்டுக்களும் பொய் என நிரூபணமாகி வருகிறது. அது போன்றுதான் கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தரமுயர்வு என்கிற சிறிய விடயம்  தமிழ், முஸ்லிம் தரப்பினரின்  பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டியது. ஆனால் இதனை மிகப் பெரிய மூலதனமாக பயன் படுத்தி மத போதகர்களுக்குப் பின்னால் சில அரசியல் காய் நகர்த்தல்கள் நடந்தேறியது. ஈற்றில் இந்த போராட்டம் புஸ்பாவனமாகிய நிலையில் மீண்டும் அப்பாவி கல்முனை தமிழ் மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு வருகின்றார்கள். இது காலாகாலமாக ஒற்றுமையாக வாழ்ந்த கல்முனை தமிழர் முஸ்லிம்களிடையே இன விரிசலை ஏற்படுத்தி நீண்ட நாள் பகையாக மாற்றுமே தவிர தீர்வினை உடனடியாகத் தராது என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள  முஸ்லிம் தரப்பினருக்கும் ஈஸ்டர்  “குண்டுவெடிப்பு” தாக்குதலுக்கும் எவ்விதமான சம்மந்தமும் இல்லாததை சட்டமே இன்று சான்று பகர்கிறது. அதுபோல் டாக்டர் ஸாபி போன்ற பலருக்கு பேரினவாதிகளால் தனது பெயர்களுக்கு தற்காலிக கழங்கம் ஏற்பட்ட போதும், அவை அனைத்தும் தோல்வியைத் தழுவி வருகிறது. 

எனவேதான் சிறுபான்மைகளாகிய தமிழ், முஸ்லிம்களிடையே பிரச்சினையை ஏற்படுத்த முனையும் பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு துணைபோக வேண்டாம் என தமிழ் தரப்பினரை வேண்டுகின்றோம் என்றார்.

பகிரவும்...