Main Menu

புற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் மனிஷா கொய்ராலா!

நடிகை மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

இது குறித்து தெரிவிக்கும் அவர், “ வயிற்றில் சில உபாதைகள் ஏற்பட்டன. அதை புற்றுநோய் என நினைக்கவில்லை. கேஸ் அசிடிட்டி என எண்ணிக்கொண்டேன். புற்றுநோய்க்கான அறிகுறிகளைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் மருத்துவர்களையும் நாடவில்லை.

எனக்குப் புற்றுநோய் என்று தெரிந்தவுடன் மும்பையின் 80 வீதமான  நண்பர்கள் என்னை விட்டு விலகிவிட்டார்கள்.  10 வருடங்களாக என் உடலை துன்புறுத்தியுள்ளேன். ஆரம்பத்தில் மும்பையின் சினிமா வாழ்க்கை என்னை அச்சுறுத்தியது.

யாரிடம் எப்படிப் பேசுவது, பழகுவது என்று தெரியாமல் இருந்தேன். அதன்பிறகு ஒரு வருடத்துக்கு 12 படங்களில் நடிக்கும் அளவுக்குப் பரபரப்பான நடிகையாக மாறினேன். ஓய்வே இல்லை. ஓடிக்கொண்டே இருந்தேன். ஒரு ஞாயிறு கிடையாது. இயற்கை ரசித்துப் பார்க்கவும் நேரமில்லை.

கவனத்தைத் திசை திருப்புவதற்காக மதுப்பழக்கத்துக்கு அடிமையானேன். அது எனக்குத் தன்னம்பிக்கையை அளித்தது. என் தயக்கத்தைக் களைந்ததால் அதை மேலும் மேலும் நாடினேன். பார்ட்டிகள் என் வாழ்க்கையில் முக்கியப் பகுதிகளாகின. என் வீட்டில் பார்ட்டி நடக்கும். அல்லது நான் பார்ட்டிக்குச் செல்வேன்.

புற்றுநோய் இல்லாவிட்டால் வேறு நோயால் பாதிக்கப்பட்டிருப்பேன். புற்றுநோய் என் தவறுகளைக் காட்டியது. என்னைக் கூர்மையாக்கியது. இன்று என் வசம் உள்ள உறவினர்களும் நண்பர்களும் உண்மையானவர்கள். நீண்ட நாள் நீடிக்கும் நட்பு அவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...