Main Menu

புதுக்கோட்டை மீனவர்களை தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் 500-க்கும் அதிகமான விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை மீன்துறை அலுவலகத்தின் அனுமதியுடன் மீன் பிடிக்க சென்றனர். இதில் கார்த்திக் (வயது 25), குட்டியாண்டி (25), ராசு (65), மனோகர், ஆனந்த் (48) ஆகிய 5 பேரும் இந்திய கடல் எல்லையில் வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல் மின்னல் வேகத்தில் வந்தது. இதைப்பார்த்த புதுக்கோட்டை மீனவர்கள் பீதியடைந்தனர். உடனே வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள்.

ஆனால் மீனவர்களின் படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர் அதில் தாவிக்குதித்தனர். பின்னர் புதுக்கோட்டை மீனவர்களிடம் இது எங்கள் நாட்டு எல்லை, நீங்கள் விதிகளை மீறி சர்வதேச எல்லையை தாண்டி வந்து ஏன் மீன் பிடிக்கிறீர்கள் என்று கேட்டனர்.

இலங்கை கடற்படை கப்பல் மோதி மீனவர்களின் விசைப்படகு சேதம்

பின்னர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த இரால் உள்ளிட்ட மீன்களை பறிமுதல் செய்தனர். அத்துடன் மீனவர்களின் வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். தொடர்ந்து அவர்கள் மீனவர்களை மரக் கட்டைகளாலும், இரும்பு கம்பிகளாலும் சரமாரியாக தாக்கினர்.

மேலும் தங்களது ரோந்து கப்பல் மூலம் மீனவர்களின் விசைப்படகு மீது பல முறை மோதி அதன் முன்பகுதியை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதில் குட்டியாண்டி தவிர மற்ற 4 மீனவர்களும் கை, கால், தோள்பட்டைகளில் பலத்த காயம் அடைந்தனர். பெரும் சிரமத்திற்கு இடையே சேதம் அடைந்த படகுடன் அவர்கள் கரை சேர்ந்தனர். காயங்களுடன் கரை சேர்ந்த அவர்களை மற்ற மீனவர்கள் மீட்டு மணல்மேல்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தங்கள் மீதான தாக்குதல் குறித்து அவர்கள் மீன்துறை அலுவலகத்தில் புகார் செய்தனர். கடந்த சில மாதங்களாக மீனவர்கள் மீதான தாக்குதல்கள், சிறைப்பிடிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் மீனவர்களை இலங்கை கடறப்டையினர் தாக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே ஜெகதாப்பட்டினத்தில் இருந்து ரமேஷ் என்பவருக்கு சொந்தமான படகில் ராமதேவன் (49), குமரவேல் (48), பாலமுருகன் (46), தமிழ்ச்செல்வன் (50) ஆகிய 4 பேரும் வங்கக்கடல் பகுதியில் ஜெதாப்பட்டினத்தில் இருந்து 14 நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட் கடல் சீற்றத்தில் மீனவர்களின் விசைப்படகு தள்ளாடியது. சிறிது நேரத்தில் படகுக்குள் தண்ணீர் புகுந்து மூழ்க தொடங்கியது. தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக மீனவர்கள் 4 பேரும் கடலில் குதித்து தத்தளித்தனர். அப்போது அந்த வழியாக வந்த மற்ற மீனவர்கள் கடலில் தத்தளித்த 4 பேரையும் மீட்டு பத்திரமாக கரை சேர்த்தனர். 

பகிரவும்...