Main Menu

கொரோனா : புதிய கோரிக்கைகளை முன் வைத்த ஜனாதிபதி மக்ரோன்

நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணிக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.  இதில் பல புதிய கட்டுப்பாடுகளையும், புதிய கோரிக்கைகளையும் முன் வைத்த மக்ரோன், இன்று (பெப்ரவரி 17) செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு பிரான்ஸ் முற்றாக முடங்குவதாக அறிவித்தார். போதிய காரணங்கள் இன்றி தனியாகவோ, குடும்பமாகவே வெளியில் செல்லவேண்டாம் எனவும், கொரோனா வைரசுக்கு எதிராக நாம் அனைவரும் பொறுப்புடையவர்களாகவும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இன்று நண்பகலுடன் பிரான்சின் அனைத்து எல்லைகளும் மூடப்படுவதாகவும், இருப்பினும் வெளிநாடுகளில் உள்ள பிரெஞ்சு மக்கள் நாட்டுக்கு வருகை தரமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  வீட்டை விட்டு வெளியேறும் மக்களை காவல்துறையினர் சோதனையிடுவார்கள் எனவும், அவர்கள் அடையாள ஆவணங்களையும் கொண்டுசெல்லவேண்டும் எனவும், இதற்காக 100,000 காவல்துறை மற்றும் ஜோந்தாமினர் கடமையில் ஈடுபடுவார்கள் எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.  வீண் வதந்திகளை கண்டு அச்சமுறாமல், பொறுப்புணர்வோடும் அர்ப்பணிப்போடும் வீடுகளில் தங்கியிருக்கவும் எனவும், மிக மிக அவசியமான காரணங்களுடன் மட்டுமே வீட்டை விட்டு வெளியேறவும் எனவும் தெரிவித்துள்ளார்.  பலசரக்கு கடைகள், மருந்தகங்கள், வங்கிகள், மருத்துவ நிலையங்கள் அனைத்தும் திறந்திருக்கும் எனவும், நாளை புதன்கிழமையில் இருந்து 25 மாவட்டங்களில் முகக்கவசங்கள் தாராளமாக கிடைக்கும் எனவும், அதன் பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் முகக்கவசங்கள் கிடைக்கும் எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.

நகரசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு பிற்போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மக்ரோன், ஓய்வூதிய சீர்திருத்த நடவடிக்கைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

கொரோனா வைரசிடம் இருந்து நம்மை காப்பாற்ற அதை நாம் பரவவிடமால் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காக நாம் தேசமாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என மக்ரோன் கேட்டுக்கொண்டார். 

பகிரவும்...