Main Menu

புதிய இந்திய உயர் ஸ்தானிகர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

இலங்கையின் இராஜதந்திர உறவுகளில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கடந்த மே 14 ஆம் திகதி காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக அவர் தனது நற்சான்றுப் பத்திரத்தை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

சந்திப்பின் பின் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஒத்துழைப்புக்கான புதிய துறைகளை கண்டறிந்து இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கான இருநாடுகளினதும் அர்ப்பணிப்பை ஜனாதிபதி இந்திய உயர் ஸ்தானிகரிடம் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

கடந்த 23 ஆம் திகதி சனிக்கிழமை இந்திய பிரதமருடன் தொலைபேசியூடாக மேற்கொண்ட சுமுகமான உரையாடலை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, தற்போதைய கஷ்டமான சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு வழங்கிய உதவி தொடர்பில் இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வாழ்த்துக்களை ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்த உயர் ஸ்தானிகர், கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு எதிரான வெற்றிகரமான போராட்டத்திற்கு ஜனாதிபதி வழங்கி வரும் சரியான தலைமைத்துவத்தை பாராட்டினார்.

இரு நாடுகளினதும் நலனுக்காக தற்போது இணக்கம் காணப்பட்டுள்ள கூட்டுப்பங்காண்மை திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதியும் இந்திய உயர் ஸ்தானிகரும் வலியுறுத்தினர். இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும் துறைகளாக மூன்றாம் நிலைக் கல்வி, சுற்றுலாத் துறை, தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், விவசாயம் மற்றும் விவசாய உற்பத்திகள் குறிப்பிடப்பட்டன.

தாம் தெரிவுசெய்யும் துறைகளில் கல்வியை பெற்றுக்கொள்வதற்காக இலங்;கை புலமைப்பரிசில் பெறுனர்களுக்கு மேலும் வாய்ப்புகளை வழங்க இந்தியா தயாராகவுள்ளதாக உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளுக்கு மேலதிகமாக இரு நாடுகளினதும் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கொவிட் 19 நோய்த்தொற்று காரணமாக உருவாகியுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு பிராந்திய நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் பயனுறுதிவாய்ந்த ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதியும் இந்திய உயர் ஸ்தானிகரும் உடன்பட்டனர்.

ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினார்.

(ஜனாதிபதி ஊடக பிரிவு)

பகிரவும்...