Main Menu

பிரான்ஸில் விரிவுரையாளர் படுகொலை: மேலும் நான்கு மாணவர்கள் கைது!

பிரான்ஸில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வரலாற்று விரிவுரையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மேலும் நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையாளியிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த நான்கு மாணவர்களும் ஆசிரியர் யாரென்று அடையாளம் காட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் கொண்டதன் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்துடன் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ஆசிரியரின் தலையை துண்டித்து கொலை செய்த 18வயது நபரின் குடும்ப உறுப்பினர்கள் நால்வர், தீவிர இஸ்லாமியவாத சிந்தனை உடைய ஒரு மாணவரின் தந்தை உள்ளிட்டோர் ஏற்கனவே கைதாகியுள்ளவர்களில் அடக்கம்.

பிரான்ஸ் மட்டுமல்லாது உலகெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை தொடர்பாக, தீவிர இஸ்லாமியவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 40பேரின் வீடுகளில் நேற்று பொலிஸார் சோதனை செய்தனர். மேலும் பல இடங்களில் தேடுதல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கூடி போராட்டமும் நடத்தினர்.

Yvelines மாவட்டத்தின் Conflans-Saint-Honorine கல்லூரிக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றது.

விசாரணையில், சார்லி ஹெப்டோ தாக்குதல் தொடர்பாக குறித்த 47 வயதுடைய சாமுவேல் பட்டி என்ற விரிவுரையாளர் பாடம் எடுத்ததாகவும், இதன்போது கேலிச்சித்திரத்தை பார்த்து மணம் புண்பட்டு, கோபமடைய வாய்ப்புள்ள மாண்வர்கள் விரும்பினால் வகுப்பறையை விட்டு வெளியேறிக்கொள்ளலாம் எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல்லா என்ற 18 வயது இளைஞன், கல்லூரிக்கு முன்பதாக இந்த தாக்குதலை நடத்தினார். இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பியோட முயற்சித்த குறித்த இளைஞன் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பகிரவும்...