Main Menu

பயண எச்சரிக்கைகளை நீக்க காலஅவகாசம் கோரும் நாடுகள் – சீனா விலக்கியது

சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் தமது நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயண முன்னெச்சரிக்கையை தளர்த்துவதற்கு, இன்னும் காலம் தேவைப்படுவதாக, கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் தெரிவித்துள்ளன.

கொழும்பில் உள்ள ஐ.நா மற்றும் வெளிநாடுகளின் 43 தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினம் சந்தித்து பேச்சு நடத்தினார். இரண்டு மணிநேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

திட்டமிட்ட தாக்குதல்களை தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவர் இந்தச் சந்திப்பின் போது விளக்கமளித்துள்ளார்.

இதன்போது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால், நாட்டின் சுற்றுலாத் துறை பாரிய நெருக்கடிக்குள்ளாகியிருப்பதாகவும், அதனை சீர்படுத்தவதற்கு வசதியாக, சிறிலங்காவுக்குப் பயணம் செய்வது தொடர்பாக பல்வேறு நாடுகளும் விடுத்துள்ள பயண எச்சரிக்கைகளை தளர்த்துமாறு சிறிலங்கா பிரதமர் கோரியிருந்தார்.

இதற்கு, சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிலைமையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை தாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக, வெளிநாட்டு தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, பயண எச்சரிக்கையை தளர்த்துவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அதற்கு இரண்டு கட்டங்களாக மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்றும் சில நாடுகளின் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா விலக்கியது

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் தமது நாட்டுக் குடிமக்களுக்கு சீனா விடுத்திருந்த பயண எச்சரிக்கையை சீன அரசாங்கம் தளர்த்தியுள்ளது.

இந்த பயண எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக, சீன தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

பகிரவும்...