Main Menu

பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில விதிகளை மீள ஆராய நடவடிக்கை – ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்தது இலங்கை!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில விதிகளை மீள ஆராய நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, போதிய விளக்கம் வழங்கப்பட்டதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உரிய மற்றும் பன்முக உரையாடலுக்காக தொடர்ச்சியாக பொறுப்புடன் செயலாற்றும்.

இருதரப்பு ஒத்துழைப்பின் சகல பிரிவு மீளாய்வு அடுத்த வருடம் முதல் காலாண்டில் ஒன்றிணைந்த ஆணைக்குழுவை கூட்டி கலந்துரையாட எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீ.எஸ்.பி கண்காணிப்பு சுழற்சி தொடர்பிலான பின்னணிக்காக விரிவான பதிலை இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஆணைக்குழுவிற்கு அளித்துள்ளது.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் அண்மையில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் பதிவாகியிருந்த அதேவேளை, 40 பேர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

இதற்கமைய பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் இரத்துச்செய்ய வேண்டும் என்ற தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி தீவிரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துமாறு குறித்த தீர்மானத்தினூடாக வலியுறுத்தப்பட்டிருந்தது.

இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கும், அவர்களை தடுப்புகாவலில் வைத்து விசாரணைகளை மேற்கொள்ளவும் அதிகூடுதல் அதிகாரங்கள் காணப்படுகின்றது.

அத்துடன், பலவந்தமாக ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறப்படுவதோடு, பாலியல் சித்திரவதைகள், மற்றும் இனவாத சித்திரவதைகள் இடம்பெறுவதாகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும், இலங்கையில் மனித உரிமைகள் மீதான கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பேண்தகு தன்மை மோசமான நிலையை அடைந்துள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...