Main Menu

நீண்டகால பிரச்சனையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம் – ஜனாதிபதி முன்னிலையில் சுமந்திரன் தெரிவிப்பு!

நீண்டகால பிரச்சனையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம் என ஜனாதிபதி முன்னிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்தி விசேட பிரிவு அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி அவர்கள் வடக்கு, கிழக்குகான இந்த செயலணியை திறந்து வைப்பதற்காக வருகை தந்தமைக்காக வடக்கில் இருந்து அவரை நாம் வரவேற்கின்றோம். வடக்கு, கிழக்குக்கு விசேடமான ஒரு நிதியை அவர் பிரதமராக இருந்த போது பனை நிதியம் என உருவாக்கியிருந்தார். போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீள் எழுச்சிக்காக அது உருவாதக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு பிரதேசத்தின் மீள் எழுச்சிக்காக அன்றே கவனம் செலுத்தியிருந்தார். தற்போது ஜனாதிபதியாக மிகவும் முக்கியமான இந்த நடவடிக்கையை முன்னெடுக்கும் போது நாம் வாழ்த்து கூறுகின்றோம். இந்த விடயத்தில் சேர்ந்து இயங்குவோம் என உறுதியளிக்கிறோம்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட்ட போது சமஸ்டி தீர்வை முன்வைத்து போட்டியிட்டார். அந்த நேரத்தில் வடக்கு மாகாணம் கால்தடம் போட்டு விழ வைத்தது. தற்போது விழ வைத்தவர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக வந்திருக்கின்றார்.

மிக முக்கியமாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தற்போது அமைச்சரவையில் இருக்கிறார்.

அவர்களுடைய ஆதரவையும் கொண்டு ஜனாதிபதியாக இருக்கும் நிலையில் இந்த நீண்டகால பிரச்சனைக்கு ஒரு ஆக்க பூர்வ முடிவை எடுப்பதாக சொல்லியிருக்கிறார். அதனை தீர்ப்பதற்கும் நாம் உறுதுணையாக இருந்து செயற்படுவோம் எனத் தெரித்விதார்.

பகிரவும்...