Main Menu

நிர்பயா கொலைக் குற்றவாளிகளை தூக்கிலிடும் இறுதித் திகதியை அறிவித்தது நீதிமன்றம்!

நிர்பயா கொலை வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள நால்வரும் எதிர்வரும்  20ஆம் திகதி தூக்கிலிடப்படவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நிர்பயா குற்றவாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ள நிலையில், அவர்களின் தூக்குத் தண்டனைக்கான திகதியை அறிவிக்குமாறு கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட நிலையில் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி குற்றவாளிகள் மார்ச் மாதம் 20ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி,  ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013ஆம் ஆண்டு செப்ரெம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரித் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தது.

இதனையடுத்து, குற்றவாளிகள் கருணை மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். குறித்த மனுக்களையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இந்நிலையில் அவர்களின் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...