Main Menu

நான் சர்வாதிகாரியா என்பதை எதிர்கால நடவடிக்கையில் தெரிந்து கொள்வீர்கள் – ஜனாதிபதி

தான் ஒரு சர்வாதிகாரி இல்லை எனவும் சர்வாதிகாரியாக செயற்படுகின்றேனா என்பதை எதிர்கால நடவடிக்கையின் ஊடாக மக்கள் பார்க்க முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அனைவரும் இணைந்து பணியாற்றவே தமிழர்கள் முஸ்லிம் மக்களுக்கு தான் அழைப்பு விடுத்ததாகவும் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த பல ஆண்டுகளாக, தமிழ் அரசியல் தலைவர்களும் சிங்கள தலைவர்களும் மக்களை முட்டாளாக்கும் வகையிலேயே பேசிவருகின்றனர்.நாம் முதலில் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

அந்தவகையில் இந்த நாட்டில் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக வாழ அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பை வழங்கவும், கல்வி பெற்றுக்கொடுக்கவும், சிறந்த வாழ்க்கை வாழவும், நல்ல வேலையைப் பெறவும், கண்ணியமாக வாழும் சூழலை நான் உருவாக்குவேன்.

நான் 20 ஆண்டுகள் இராணுவத்தில் இருந்தேன் என்பது உண்மை. நான் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு இராணுவ அதிகாரியாகப் போராடினேன்.

பின்னர் நான் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றேன், அமெரிக்காவில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் வாழ்வதற்காக சென்றேன், பின்னர் நான் மீண்டும் செயலாளராக வந்தேன், ஆனால் மக்கள் என்னை பாதுகாப்பு செயலாளராக மட்டுமே அங்கீகரித்தனர்.

என்னை சர்வாதிகாரி அல்லது இனவெறி சிங்கள தலைவர் என பலர் விமர்சித்தனர். நான் உண்மையில் ஒழுக்கமான நபர், நான் இனவெறியாளர் அல்ல என்பதை எனது செயலில் நிரூபித்துள்ளேன். நான் ஒரு சமூகத்திருக்கு சார்பாக மட்டுமே வேலை செய்ய மாட்டேன்.

அதனால்தான் நாட்டை கட்டியெழுப்ப, என்னுடன் இணையுமாறு தமிழர்கள் முஸ்லிம்கள் என அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தேன். நான் சர்வாதிகாரியாக செயற்படுகின்றேனா என்பதை எனது எதிர்கால நடவடிக்கையின் ஊடக மக்கள் பார்க்க முடியும்.

எனவே என்னை விமர்சிப்பதை விடுத்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என புலம்பெயர் மக்களை நான் கேட்டுக்கொள்கின்றேன்” என கூறினார்.

பகிரவும்...