Main Menu

நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்கள் சர்வதேச ஒப்பந்தங்களால் நாட்டை காட்டி கொடுத்துள்ளன : பிமல் ரத்நாயக்க

நாட்டை ஆட்சிசெய்து வந்த அரசாங்கங்கள் அண்மைக்காலமாக மேற்கொண்டுவந்த சர்வதேச ஒப்பந்தங்கள் மூலம் நாட்டை காட்டிக்கொடுத்தே வந்துள்ளன.

கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவுடன் செய்துகொண்ட எக்டா ஒப்பந்தத்தை இந்த அரசாங்கம் நீடித்திருக்காவிட்டால் நாட்டுக்கு நன்மை ஏற்படும்வகையில் புதிதாக அதனை மேற்கொண்டிருக்கலாம். 

ஆனால் இந்த அரசாங்கமும் ஒப்பந்தத்தை நீடித்து அமெரிக்காவுக்கு நாட்டை காட்டிக்கொடுத்திருக்கின்றது என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் பிமல் ரத்ணாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சர்வதேச ஒப்பந்தங்கள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வெளிநாட்டு ஒப்பந்தங்களை முழுமையாக நிராகரிக்கவும் முடியாது ஆதரிக்கவும் முடியாது. ஒப்பந்தங்களை செய்யும்போது அதில் நாட்டுக்கு கிடைக்கும் நன்மை தொடர்பாக ஆராய்ந்து பார்க்கப்படவேண்டும். 

அதேபோன்று செய்துகொள்ளப்போகும் ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சரவையின் அனுமதி பெறப்படுவதுடன் பாராளுமன்றத்துக்கும் அதனை சமர்ப்பிக்கவேண்டும். அப்போதுதான் அதுதொடர்பில் மற்றவர்களின் கருத்துக்களை அறிந்துகொள்ளலாம்.

ஆனால் இந்த நாட்டை ஆட்சிசெய்துவந்த அரசாங்கங்கள் அண்மைக்காலமாக சர்வதேசத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் குறித்து யாருக்கும் ஒன்றும் தெரியாது. குறிப்பாக 1995ஆம ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா காலத்தில் அமெரிக்காவுடன் சோபா ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் அமெரிக்க தூதரகத்தினால் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு, அதனை அனுமதிக்குமாறு தெரிவித்து அனுப்பப்பட்டது. 

அதேபோல் 2007இல் மஹிந்த ராஜபக்ஷ் காலத்தில் கோத்தபாய ராஜபக்ஷ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக அமெரிக்காவுடன் எட்கா ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் அமைச்சரவைக்கோ பாராளுமன்றத்துக்கோ தெரியாமலே கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தால் நாட்டுக்கு நன்மை இருக்கின்றாதா தீமை இருக்கின்றதா என்பது தொடர்பில் தேடிப்பார்க்கவில்லை. ராஜபக்ஷ்வினருக்கு தேவைக்கு ஏற்றவகையில் அதில் கைச்சாத்திடப்பட்டது.

அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷ் 2007இல் கைச்சாத்திட்ட எட்கா ஒப்பந்தத்தின் காலம் 10 வருடத்துடன் காலம் முடிவடைந்தது. அதாவது கடந்த 2017இல் இந்த ஒப்பந்தத்தின் காலம் முடிவடைந்தவுடன் மெரிக்கா மீண்டும் அந்த ஒப்பந்த காலத்தை நீடிக்குமாறு தெரிவித்து அறிவித்ததுடன் இந்த அரசாங்கம் அதனை மேற்கொண்டது.

மேலும் எட்கா ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஒன்றும் தெரியாது என இன்று சிலர் தெரிவிக்கின்றனர். ஆனால் 2017ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியே அந்த ஒப்பந்தத்தில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்து அவரின் கையெழுத்துடன் அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருக்கிறார். அதேவருடன் ஆகஸ்ட் மாதம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த ஒஸ்டின் பெர்ணான்டோ ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கின்றார்.

அதனால் 2007இல் ராஜபக்ஷஅரசாங்கம் நாட்டை காட்டிக்கொடுத்ததுபோல் 2017இல் எட்கா ஒப்பந்தத்தின் காலத்தை நீடித்ததன் மூலம் மைத்திரி, ரணில் அரசாங்கமும் காட்டிக்கொடுத்துள்ளது. அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை நீடித்திருக்காவிட்டால் அமெரிக்காவுடன் புதிதாக கலந்துரையாடி நாட்டுக்கு நன்மை ஏற்படும்வகையில் மாற்றியமைத்துக்கொள்ள முடிந்திருக்கும். அந்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் இல்லாமலாக்கி இருக்கின்றது என்றார்.

பகிரவும்...