Main Menu

நாட்டில் அடுத்தது ஜனாதிபதித் தேர்தல் – அனைவரும் சரியான முடிவை எடுக்க வேண்டும்!

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள், தேவைகள் அறிந்து சிறுபான்மை மக்களை மதித்து அக்கறையுடன் செயற்படும் ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி தான் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

அந்தக் கட்சி அதிகாரத்தில் இருந்தால் தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வையும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் சூழலையும் ஏற்படுத்தலாம் என்றும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். 

இந்து சமய விவகார அமைச்சின் ஏற்பாட்டில் தெய்வீக சேவைத் திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ். இலங்கை வேந்தன் மண்டபத்தில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் விருந்தினராகக் கலந்த கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இந்து ஆலயங்களுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அது மட்டுமல்லாமல் மத ரீதியான பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்பட்டன. ஆனால் இன்றைக்கு அவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் அதிக அக்கறை எடுத்து தீர்த்து வைக்கும் செயற்பாடகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றது. 

அதற்கமைய இன்றைய இந்து கலாசார அமைச்சர் தன்னாலான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார். அதே நேரத்தில் இன்னும் பல ஆலயங்கள் இராணுவத்தின் கட்டப்பாட்டிலேயே இருக்கின்றன. அது எங்களுக்கு மிக மன வருத்தத்தை ஏற்படுத்தகின்றன. 

ஆகவே, இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கின்ற இந்து ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். இந்த நாட்டில் அடுத்து ஒரு தேர்தல் வர இருக்கின்றது. அது ஜனாதிபதித் தேர்தலாகவே இருக்கப் போகின்றது. அதில் சரியான முடிவை அனைவரும் எடுக்க வேண்டியது அவசியமானது. அந்தத் தேர்தலில் ஒரு கட்சியைச் சேர்ந்தவர் போட்டியிட வேண்டும். அப்பொது தான் அனைத்தையும் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைக்கின்றேன். 

குறிப்பாக நாட்டிலுள்ள சிறுபான்மை மக்களை மதிக்கிறதும் அவர்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்றதும் எங்களது ஐக்கிய தேசியக் கட்சி தான். ஆகவே, வடக்கு கிழக்கு மலையகம் என அனைத்து சிறுபான்மை மக்களுக்காகவும் எமது கட்சியே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. ஆகையினால் எமது கட்சி அதிகாரத்திற்கு வருகின்ற போது நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தலாம். அத்தோடு அனைத்து மக்களும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழக் கூடியதாக இருக்கும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். 

பகிரவும்...