Main Menu

நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அச்சம் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது – இரா.சாணக்கியன்

நாடாளுமன்ற உரை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையுள்ளதனால் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றுவதற்கு அச்சங்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,  களுவாஞ்சிகுடியில் உள்ள எனது அலுவலகத்தில் திருகோணமலையிலிருந்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் விசாரணைக்காக வருகைதந்திருந்தார்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ்மா அதிபர் மண் அகழ்வு விடயமாக கேட்கவிரும்புவதாக கேட்டிருந்தார்.அதற்கு நான் இணக்கம் தெரிவித்திருந்தேன்.சரியான விடயத்தினை செய்யப்போகின்றார்கள் என்று நம்பியிருந்தேன்.

ஆனால் 10-09-2021 சிங்கள பத்திரிகையொன்றில் கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்திருந்த செய்தியொன்று வெளிந்திருந்தது. அதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்த கருத்தினை வைத்து ஆளுனரினால் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரிடம் 09ம் திகதி ஒரு முறைப்பாட்டினை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரை என்ன என்பது கூட தெரியாமல் கிழக்கு மாகாண ஆளுனர் இவ்வாறாக நடந்துகொள்வது மிகவும் கவலையான விடயம். கிழக்கு மாகாண ஆளுனரை பொறுத்தவரையில் அவர் கிழக்கு மாகாணத்தில் முற்றுமுழுதாக தமிழ் பேசும் மக்களுடைய விடயங்களை சரியான வகையில் கையாளாகதவராகவே இருந்துவருகின்றார்.

கடந்த காலத்தில் மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் தரை காணி விடயம் தொடர்பில் அவரின் செயற்பாடுகள்,மண்மாபியாக்களை கட்டுப்படுத்திலான அணுகுமுறைகள்,மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அவர் நடந்துகொள்ளும் விதங்களை பார்க்கும்போது கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நலன்களை விட ஏனையவர்களின் நலனையே நோக்காக கொண்டுசெயற்படுகின்றார்.கிழக்கு மாகாண ஆளுனரின் செயற்பாடுகள் பொலிஸாரையும் நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடாவேயுள்ளது.

நாடாளுமன்றத்தில் நான் பேசிய ஒரு விடயத்தினை இவ்வாறு விசாரணைசெய்யுமாறு கூறினால் வருங்காலத்தில் மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றுவதற்கு அச்சம்கொள்ளும் நிலையே ஏற்படும்.

கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இனவாத அரசியலை செய்கின்றது என்று அவர் ஊடகங்களுக்கு எனது பெயரை கூறி தெரிவித்தது தொடர்பில் நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் என முறையிட்டபோதிலும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அண்மையில் கூட  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் கைதுசெய்யப்பட்டது அவரது சிறப்புரிமையினை மீறும் ஒரு செயல்.தியாக தீபம் திலிபன் நினைவுதினத்தினை அமைதியான முறையில் அனுஸ்டித்தபோது அவரை கழுத்தைப்பிடித்து இழுத்துச்சென்றதானது பாராளுமன்ற உறுப்பினர் என்றதுக்கே மதிப்பளிக்காத தன்மையினை அங்கு காணமுடிந்தது.கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கும் சிறப்புரிமையை மதிக்கவேண்டும்.

அதிகாரிகளின்  இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகத்தான்  நாடாளுமன்ற சிறப்புரிமையும் சவாலுக்குவந்துள்ளது.இது தொடர்பில் சபாநாயகர் தனது கவனத்தினை செலுத்தவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையினை பாதுகாக்கவேண்டியது அவரின் பொறுப்பு.

கிழக்கு மீட்பு கோசத்தினை செய்துவந்தவர்கள் இன்று காணி,மண் என பல கொள்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.இவர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்காக ஏதாவதுசெய்யவேண்டும்.

இன்று ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 200பேருக்கு மட்டுமே இவர்களினால் வேலைவாய்ப்பினைப்பெற்றுக்கொடுக்கமுடிந்தது.

2021ஆம் ஆண்டு ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் 33325பேருக்கு இலங்கையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.இதில் சிங்கவர்களுக்கு 31517பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.தமிழ் மக்களுக்கு 1060பேருக்கு வழங்கப்பட்டுள்ளது,748முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 33325பேரில் வெறும் ஆயிரம் தான் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் 25வீதத்திற்கு மேல் தமிழ் பேசும் மக்கள் வாழும்போது இனவிகிதாசார அடிப்படையில் வழங்கியிருந்தால் கூட இதில் 8000பேருக்காவது நியமனங்கள் வழங்கியிருக்கவேண்டும்.இந்த விடயத்தினைக்கூட உங்களால் கையாளமுடியாவிட்டால் உங்களால் என்ன அபிவிருத்தியை செய்யமுடியும்.

அண்மைக்காலமாக தூக்கத்திலிருந்த சில இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கும் இங்கும் கருத்துச்சொல்வதும்,ஒருநாளும்  நாடாளுமன்றத்தில் உரையாற்றாதவர்கள் இன்று பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.சாணக்கியன் பேசுகின்றார் என்ற காரணத்தினால் உங்களது மக்களுக்கு ஏதாவது குரல்கொடுக்கவேண்டும் என்று உங்களுக்கு ஆர்வம் வந்ததை வரவேற்கின்றேன்.

20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் 748 முஸ்லிம்களுக்குதான் நியமனம் வழங்கப்பட்டுள்ளது தொடர்பிலாவது சிந்திருக்கவேண்டும்.தனிப்பட்ட இலாபங்களுக்காக மாறிவிட்டு என்னை விமர்சிக்கவரவேண்டாம்.நான்  நாடாளுமன்றத்தில் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுப்பேன்.இதுவே எங்களது கட்சியின் நிலைப்பாடுமாகும்.

தேசிய இனவிகிதாசாரத்தில் நியமனங்களைக்கூட பெற்றுவழங்கமுடியாதவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதானது தங்களது தனிப்பட்ட சுயலாபங்களுக்காகவேயாகும். என தெரிவித்தார்.

பகிரவும்...