Main Menu

நாடளாவிய ரீதியில் நீட் தேர்வு ஆரம்பம்

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு ஆரம்பமாகியுள்ளது. நாடு முழுவதும் 11 மொழிகளில் 15.97 இலட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு தேசிய அளவில் மாணவர்களை தெரிவு செய்ய தேசிய தகுதி நுழைவுத்தேர்வு எனப்படும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மிகவும் கவனமாக இந்த தேர்வை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தியது.

இந்தியா முழுவதும் 15 இலட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களுக்காக நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,546 மையங்களில் ‘நீட்’ தேர்வை நடத்த முதலில் திட்டமிடப்பட்டது.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 3,842 ஆக உயர்த்தப்பட்டது. இந்த தேர்வு மையங்களில் ஒவ்வொரு அறையிலும் 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அனுமதித்து தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இத்தகைய கடும் கட்டுப்பாடுகள், பரிசோதனைகளுக்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு இடம்பெற்று வருகிறது.

மதியம் 2 மணிக்கு ‘நீட்’ தேர்வு தொடங்கியது. இன்று மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒரியா, அசாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் தேர்வு நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வுக்காக சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய நகரங்களில் 238 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை தேர்வு முடிந்ததும் நாளையில் இருந்தே திருத்தும் பணி தொடங்கவுள்ளதுடன், இந்த மாத இறுதியில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...