Main Menu

தேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிமா?: சிறுபிள்ளைத் தீர்மானங்கள் வேண்டாம் – சரத்

இலங்கைக்கும், உலகத்திற்கும் முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் தேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் ஒருவரை ஏன் நியமித்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன், தமிழ் பயங்கரவாத சூழல் ஒன்று இருந்த நேரத்தில் தமிழ் புலனாய்வு அதிகாரியை நியமித்திருந்தால் யுத்தத்தை முடித்திருக்க முடியுமா எனவும் அவர் கேட்டுள்ளார்.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை மீதான இரண்டு நாட்கள் விவாதம் நேற்று ஆரம்பமாகியது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெரிவிக்கையில், “இன்று நாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இல்லாது இராஜாங்க அமைச்சர் ஒருவருடன் மட்டுமே அரசாங்கம் பயணிக்கின்றது. அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளபோதும் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. இதுவொரு பாரிய பிரச்சினையாகும்.

இவையெல்லாம் அரசாங்கத்தின் குறைபாடாகும். சிறுபிள்ளைகள் தீர்மானம் எடுப்பதைப் போல் அரசியல் தீர்மானம் எடுக்க முடியாது. அத்துடன் இன்று வீரர்கள் போன்றும் பௌத்தர்கள் போன்றும் பேசுபவர்கள் அன்று பிரபாகரன் இருந்த காலத்தில் வெளியில் வரவில்லை.

தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதாக கூறும் ஜனாதிபதி பயங்கரவாதத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாகக் கூறினார். அதற்கு முதலில் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்க வேண்டும்.

அதேபோல் தகுதியானவர்களை பதவிக்கு நியமிப்பதாகக் கூறி இருவரை நியமித்தார். ஒருவர் தேசிய புலனாய்வு அதிகாரி, இன்னொருவர் அரச புலனாய்வு அதிகாரி.

இந்த இருவரும் பொறுப்புக்கு தகுதி இல்லாதவர்கள். இன்று முழு உலகத்திலும், இலங்கையிலும் முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில் அரச புலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் அதிகாரி ஒருவரை நியமித்து எவ்வாறு சேவையினை முன்னெடுக்க முடியும்?

ஆனால் இவர்கள் இருவரும் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் என்ற காரணத்தினால் இந்த பதவி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் பயங்கரவாத சூழல் ஒன்று இருந்த நேரத்தில் தமிழ் புலனாய்வு அதிகாரியை நியமித்திருந்தால் யுத்தத்தை முடித்திருக்க முடியுமா? அது அவர்களின் பொறுப்புக்களை சரியாகக் கையாள முடியாத நிலைமைக்கே கொண்டு செல்லும்.

அதேபோல் இப்போது முஸ்லிம் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரால் முஸ்லிம் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட முடியாது.

அவரது குடும்பம், வதிவிடம் என அனைத்துமே தடையாக இருக்கும். எனவே பொறுப்பான அதிகாரிகளை சரியான இடத்தில் இந்த அரசாங்கம் நியமிக்க வேண்டும்” என்றார்.

பகிரவும்...