Main Menu

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பழியை எத்தனை ஆண்டுகளானாலும் அரசாங்கத்தால் துடைத்துக் கொள்ள முடியாது – மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட பழியை எத்தனை ஆண்டுகளானாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தால் துடைத்துக்கொள்ள முடியாது என  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அப்பாவிப் பொதுமக்கள் மீது அநியாயமாக தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன.

அந்தச் சோக சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய தாளமுத்து நகரைச் சேர்ந்த 31 வயது நெல்சன்  தன்மீது பாய்ந்த குண்டை அறுத்து அகற்றினால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று மருத்துவர்கள் கொடுத்த அறிவுரைகளை ஏற்று துப்பாக்கிக் குண்டை உடலில் தாங்கி  இன்னும் நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்.

எதிரி நாட்டு இராணுவம் சுடுவதைப் போல இரக்கம் சிறிதும் இன்றி கொடூர மனதுடன்  சொந்த நாட்டு மக்கள் மீது எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கம் நடத்திய குண்டு வேட்டைச் சத்தம் இப்போதும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்தப் பகுதி மக்களின் உறக்கத்தை அனுதினமும் கலைத்துக் கொண்டுதான் இருக்கிறது.

நூறு நாட்கள் அமைதி வழியில் போராடிய மக்களை அடித்துக் கலைக்கத் திட்டமிட்டு வன்முறையை விதைத்து  ‘இனி இந்தப் போராட்டம் தொடரக்கூடாது’ என்ற பயத்தை ஏற்படுத்தவே ஏதுமறியாத 13 பேரின் உயிர்கள் பலியாக்கப்பட்டன. இந்தப் பழியை எத்தனை ஆண்டுகளானாலும் பழனிசாமி அரசாங்கத்தால் துடைத்துக் கொள்ள முடியாது” எனப் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...