Main Menu

துருக்கியர்களுக்கு பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க ஜனாதிபதி எர்டோகன் அழைப்பு!

தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்ஸின் கடுமையான நிலைப்பாடு தொடர்பாக துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், துருக்கியர்களுக்கு பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

தொலைக்காட்சி உரையில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் கூறுகையில், ‘பிரான்ஸில் முஸ்லிம்களுக்கு எதிராக ஒடுக்குமுறை இருந்தால் முஸ்லிம்களைப் பாதுகாக்க உலகத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும்’ என அவர் கேட்டுக்கொண்டார்.

முகமது நபியின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரத்தை வகுப்பறையில் காட்டிய காரணத்திற்காக, பிரான்ஸில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி வரலாற்று விரிவுரையாளரான 47 வயதான சாமுவேல் பேட்டி என்பவர், அப்துல்லாக் அன்சோரோவ் என இளைஞரால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தினால் ஆத்திரமடைந்த பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இஸ்லாமியவாதிகள் நமது எதிர்காலத்தை பறிக்க நினைப்பதால் ஆசிரியர் சாமுவேல் பேட்டி கொல்லப்பட்டார். ஆனால் பிரான்ஸ் கேலிச்சித்திரங்களை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது’ என கூறினார்.

இந்த பின்னணியில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, குவைத், ஜோர்தான் மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளிலுள்ள சில அங்காடிகளில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், பிரான்ஸ் ஜனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து லிபியா, சிரியா, காசாவில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

பகிரவும்...