Main Menu

தீர்வையே தமிழர்கள் கேட்கின்றனர் – சி.வி.விக்னேஸ்வரன்

தீர்வையே தமிழர்கள் விரும்புகின்றார்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அனுப்பிவைத்துள்ள கேள்விக்கான பாதியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தாம் ஒரு தேசம் என்ற முறையில் தம்மைத்தாமே ஆளும் உரிமை படைக்க வேண்டும் என்பதையே தமிழர்கள் நாடுகின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிலில் “தமிழ் மக்களைத் தவறாக மாண்புமிகு பிரதம மந்திரி எடை போட்டுள்ளார். தமிழ் மக்களின் ஏகோபித்த உந்துதலே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வெளிக்கொண்டு வந்தது. பொங்கி வந்த மக்கள் உணர்வுகளை அரசியல்வாதிகளால் கட்டுப்படுத்த முடியாமல்த்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானம் எழுந்தது.

அதனை இயற்றி அதன் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மாறாக, அதற்குத் தடை செய்வது போல், நடந்து கொண்ட அரசியல்வாதிகளைக் காலனிடம் அனுப்பியதும் மக்களின் கொதித்தெழுந்த உணர்வுகள் தான். தற்போது மக்கள் மனம் அறியாமல் அவர்கள் நலம் பேணாமல் சுயநலப் பாதைகளில் பயணஞ் செய்ய விழையும் அரசியல்வாதிகளைத் தூக்கி எறிய முன் வந்துள்ளவர்களும் மக்கள் தான்.

எச்சில் இலைகளில் இருந்து வீசப்படும் எலும்புகளை எதிர்பார்க்கும் ஏமாளிகளாக எமது ஸ்ரீலங்கா பிரதமர் எம்மை எடைபோடக்கூடாது. எமது அரசியல்வாதிகள் மக்களின் மனதுக்கு மாறாக நடக்கின்றார்கள் என்றால் அது பிரதமர் போன்றவர்கள் எமது அரசியல்வாதிகளுக்கு சுயநலப் பாதைகளைக் காட்டி எமது அரசியல்வாதிகள் தமது பாதையும் பயணமும் மாறச் சூழ்ச்சிகள் செய்து வருவதாலேயே.

தமிழ் மக்கள் வெறும் பொருளாதார அபிவிருத்தியையே நாடி நிற்கின்றார்கள் என்று பிரதமர் கூறுவது எமது வழி வகையற்ற பாதிக்கப்பட்ட மக்களை எலும்புத் துண்டுகளைக் கொடுத்து தன்பக்கம் ஈர்க்க முடியும் என்று அவர் எண்ணுவதாலேயே. எமது அரசியல்வாதிகள் பலர் பாதை மாறிச் செல்வது உண்மையே.

ஆனால் எமது மக்கள் தமது உரிமைகள் பற்றியும் வருங்காலம் பற்றியும் போதிய விழிப்புடன் தான் இருக்கின்றார்கள். மக்களின் மனம் அறிந்த அரசியல்வாதிகள் வெகுவிரைவில் பாராளுமன்றத்தை அலங்கரிக்க வர இருக்கின்றார்கள் என்பதை அவருக்குக் கூறிவைக்கின்றேன்.

அவற்றைத் தடுக்கு முகமாக சர்வாதிகாரப் போக்கினை அவரின் சகோதரர் எடுப்பாராகில் அதற்கும் முகம் கொடுக்க எமது மக்கள் தயாராகவே உள்ளனர். எம்மையும் எமது மக்களையும் பிரித்தொதுக்கும் நடவடிக்கைகளில் இனியாவது மாண்புமிகு பிரதமர் அவர்கள் ஈடுபடாது இருப்பாராக.

வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமானதல்ல என்ற வாதம். இதற்கு அவர் தரும் வாதம் வடக்கு கிழக்கிற்கு அப்பால் தமிழர்கள் வாழ்கின்றார்கள் என்பது. ஒரு தாய்க்கு ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர். ஐந்தாவது பிள்ளை கைக்குழந்தை. அதற்குத் தேவையான தாய்ப்பாலைக் கொடுப்பது தாயின் கடமை. மாண்புமிகு பிரதமரின் வாதம் என்னவென்றால் நான்கு வேறு பிள்ளைகள் தாய்க்கு உள்ளார்கள். அவர்களுக்கும் தாய்ப்பால் போய்ச் சேரவேண்டும் என்பதால் கைக்குழந்தைக்கு மட்டுமே தாய் பால் கொடுப்பது தவறு என்பதாகும்.

நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன். சிங்கள சகோதரர்களுடன் தோளுக்கு தோள் நின்று உரிமையுடன் வாழ்ந்தவன். ஆனால் அரசாங்கம் வட கிழக்கு மக்களை நடத்தி வருவது என்னை நடத்திய விதத்தில் அல்ல. நான் பெரும்பான்மை மக்களின் இடையில் வாழ்ந்த சிறுபான்மையினன். என்னால் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது என்று நினைத்து என்னை வளரவிட்டார்கள்.

ஆனால் 1958ம் ஆண்டும், 1983ம் ஆண்டும் என் உறவினர்கள் பலரை, நண்பர்கள் பலரை, தமிழ்க் கட்சிக்காரர் பலரைப் பாதிக்கத் தவறவில்லை. தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் வடகிழக்கில் அவர்களுக்குரிய மனித உரிமைகளைச் சிங்கள அரசாங்கத்தவர்கள் தடை செய்கின்றார்கள் என்பதே உண்மை.

வடகிழக்கு தமிழ் மக்கள் தமது உரிமைகளைத்தான் கேட்கின்றார்கள். அதை அவர்களுக்குக் கொடுக்காது நாட்டில் பல பகுதிகளிலும் தமிழர்கள் வாழ்கின்றார்கள், ஆகவே வடகிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு மட்டும் உரிமைகளை வழங்கமுடியாது என்று கூறுவதன் அர்த்தம் என்ன? நீங்கள் உரிமைகள் கேட்டால் இன்னுமொரு 1958யும் 1983யும் தெற்கில் உள்ள தமிழர்களுக்கு எதிராகக் கொண்டு வருவோம் என்பது தானே?

இவ்வாறான பூச்சாண்டி காட்டி எமது தமிழ் மக்களை அடிபணிய வைத்த காலம் மலையேறிவிட்டது என்பதை ஐம்பது வருடங்கள் அரசியல் செய்த மாண்புமிகு பிரதமர் உணரவேண்டும். இன்று உலகம் முழுவதிலும் இலங்கை அரசாங்கம் பற்றியும் அதன் அரசியல்த் தலைவர்கள் பற்றியும் போதிய புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.

வடக்கு கிழக்குக்கு வெளியில் தமிழர்கள் உள்ளார்கள். ஆகவே வடக்கு கிழக்கு மக்கள் தமது உரிமைகளைக் கேட்கக்கூடாது என்ற சிறுபிள்ளைத்தனமான வாதங்களை மாண்புமிகு பிரதமர் முன்வைக்காமல் இருந்தால் நல்லது. வடகிழக்கிற்கு வெளியில் இருக்கும் தமிழர்கள் தாம் எங்கு வாழவேண்டும். வசிக்க வேண்டும் என்பதைத் தாமே தீர்மானித்துக் கொள்வர்.

தமிழ் மக்களை ஏமாற்றி, பிரித்தானியர்களை ஏமாற்றி சிங்களத் தலைவர்கள் இதுகாறும் வடகிழக்குத் தமிழ் மக்களுக்கு உரிய அரசியல்த் தீர்வினைப் பெற்றுக் கொடுக்காமல் விட்டபடியால்த்தான் இன்று இந்த நாடு சீனாவின் கோரப்பிடிக்குள் சிக்கியுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் 15,000 ஏக்கர் காணியும் கொழும்புத்துறைமுகமும் இப்பொழுது அவர்களின் பராமரிப்பிலேயே இயங்குகின்றன. தொடர்ந்தும் அதற்கு இடம் கொடுக்கப் போகின்றாரா மாண்புமிகு பிரதமர்? வடக்கு கிழக்கு மக்கள் தனிநாடு கேட்டது உண்மைதான்.

தற்போது அவர்கள் கேட்பது சட்டம் முழுமையாக ஏற்கும், அங்கீகரிக்கும், வரவேற்கும் ஒரு தீர்வையே. ஒருமித்த நாட்டினில் வடகிழக்குத் தமிழ்ப் பேசும் மக்கள், தாம் ஒரு தேசம் என்ற முறையில் தம்மைத்தாமே ஆளும் உரிமை படைக்க வேண்டும் என்பதையே நாடுகின்றார்கள். அது அவர்கள் பிறப்புரிமை.

3000 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து, அடையாளப்படுத்தப்படக் கூடிய பிரதேசங்களில் தமது மொழி, கலை, கலாச்சாரத்துடன் வாழ்ந்து வந்த மக்கட்கூட்டம் சட்டப்படி கோரும் அவர்கள் உரித்தை வழங்காமல் மாண்புமிகு பிரதமர் வாய்க்கு வந்தபடி பேசுவது அவருக்கு அழகல்ல. அதுவும் இந்திய ஊடகங்களுக்கு மிகுந்த கவனத்துடன் அவர் தமது செவ்விகளை வழங்க வேண்டும் என்று சாதாரண குடி மகனாக நான் கேட்டு வைக்கின்றேன்” என கூறியுள்ளார்.

பகிரவும்...