Main Menu

திறந்து விட்டுள்ள சாராய ஆறு பல்லாயிரம் உயிர்களைக் கொண்டு செல்லப் போகிறது- கமல் கடும் கண்டனம்

திறந்துவிட்டுள்ள சாராய ஆறு பல்லாயிரம் உயிர்களைக் கொண்டுசெல்லப் போகிறது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளமை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த அறிக்கையில், “ஒரு வைரஸ் கிருமிக்கு இருக்கும் உயிர் வாழும் ஆசை கூட, தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்காது என திண்ணமாக நம்பும் ஒரு அரசு நமக்கு வாய்த்தது ஏன்? ஓட்டுக்கு காசு வாங்கி, 5 வருடம் நம் வாழ்வை இவர்களுக்கு குத்தகைக்கு விட்டோமே அதன் விளைவு தான்.

பஞ்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மதுக்கடைகளைத் திறந்துவிட்டால் மக்களின் கவனம் திரும்பிவிடும் என நம்பும் அரசுக்கு பெயர் அம்மாவின் அரசா? தாயுள்ளம் கொண்டோர் அனைவருக்கும் அவமானமல்லவா அது? இலவசமாக எத்தனை தாலிகள் தந்தாலும், வேலையில்லாத குடிகாரன் வீட்டுத் தாலி பறிக்கப்பட்டு, அடகுக்கடைக்குப் போகும்.

பின்னர் அரசு நடத்தும் சாராயக் கடைகள் மூலம் அரசுக்கே வந்து சேரும் என்று தெரியும் தமிழ்நாட்டை ஆள்பவர்களுக்கு. ஆள்பவர்களும் இந்த வசூல் கொள்ளையில் பங்குதாரர்கள் என்பது ஊரறிந்த இரகசியம்.

இந்த அரசு செய்யும் தொடர் அபத்தங்களை நிறுத்தாவிட்டால், சுனாமி கொண்டுசென்ற உயிர்களைவிட அதிகமான உயிர்களை இந்த நோய் காலத்தில், அரசு தற்போது திறந்து விட்டுள்ள சாராய ஆறு கொண்டு செல்லும்.

அப்படி எதுவும் நடந்தால், தமிழகத்தின் தலைமை, கொலைக்குற்றத்தை ஏற்று பதவி விலகவா போகிறது? சிறைக்கு அனுப்பினாலும் தொடரும் இந்த ஊழல் சங்கம், கொரோனாவை விட அதிக தமிழ் மக்களைக் கொல்லும்.

நோய் தொற்றிற்கு தப்லீக் ஜமாத்தை மட்டும் காரணம் காட்டிய பலர், கோயம்பேடு, நோய் விநியோக நிலையமாக மாறியதற்கு ஆளும் அரசியல் வியாபாரிகளைத் தவிர, வேறு யாரை குற்றம் சாட்ட முடியும்?

கிராமங்கள் எங்கும் டாஸ்மாக் வாசலில் திருவிழாக் கூட்டம். கொள்ளை நோய் ஒரு பக்கம், அரசுகளின் தொடர் கொள்ளை இன்னொரு பக்கம். தாங்குமா தமிழகம்? வெகுண்டெழு தமிழகமே, வேறு தலைமையைத் தேடு.

அரசுக்கு ஒரு சிறு குறிப்பு, இன்றும் தாமதமாகி விடவில்லை. நேர்மைக் குரல்களுக்குச் செவி சாய்த்தால், மக்களுக்கு இருக்கும் நியாயமான கேள்விகளுக்கு, நேர்மையான பதிலை இந்த அரசு அளித்தால், நடக்கும் இந்த ஆட்சியின் முடிவு, அசிங்கமானதாக இல்லாமல் தப்பிக்க ஒரு சிறிய வாய்ப்பு இருக்கிறது.

உண்மையில் இது யாருக்கான அரசோ? இதுவரை கிடைத்த தடயங்களைப் பார்க்கையில் மனசாட்சி என்று ஒன்று உங்களுக்கு இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை இருந்தால் அதைத் தொட்டுச் சொல்லுங்கள். இல்லையேல் மேலிடத்தில் கேட்டுச் சொல்லுங்கள்” என்று கமல் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...