Main Menu

திருமதி இலங்கை அழகியின் கிரீடத்தை பறித்த திருமதி உலக அழகிக்கு 10- 20ஆண்டுகள் சிறைத் தண்டனை!- சட்டத்தரணி

2021 ஆம் ஆண்டுக்கான திருமதி  இலங்கை அழகி போட்டியின் வெற்றியாளரான புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தை, அவரது தலையில் இருந்து வலுக்கட்டாயமாக திருமதி உலக அழகி கரோலின் ஜூரி பறித்ததாக உறுதி செய்யப்பட்டால், அவருக்கு 10- 20 வருடகால சிறைத்தண்டனையை பெற்றுக்கொடுக்க முடியுமென ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர். டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்பாட்டுக்காக உலக அழகி கரோலின் ஜூரியிடம் இழப்பீடும் கோருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக சட்டத்தரணி யு.ஆர். டி சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “ நடுவர் மன்றத்தினை மீறி அவரது சக்தியை காட்டுவதற்கு  கரோலின் ஜூரி முனைந்துள்ளமையே அவரது செயற்பாடு காட்டுகின்றது.

அந்தவகையில் குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் கரோலின் ஜூரி மீது வற்புறுத்தல், மிரட்டி பணம் பறித்தல், திருட்டு மற்றும் காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்படலாம்.

இதேவேளை போட்டியின் ஏற்பாட்டுக் குழு, கரோலின் ஜூரிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கும் வாய்ப்புள்ளது.

மேலும், குறித்த நிகழ்ச்சியில் கரோலின் ஜூரியின் நடவடிக்கைகளை ஒருபோதும் மன்னிக்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற, திருமதி  இலங்கை அழகிப் போட்டியில் புஷ்பிகா டி சில்வா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

குறித்த சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் ஜூரி, அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டார். அதாவது, வெற்றியாளர் விவாகரத்து செய்யப்பட்டவர். அத்தகைய ஒருவர் இதில் போட்டியிட முடியாது. எனவே இரண்டாவது வெற்றியாளர், முதலாவது வெற்றியாளராக தெரிவு செய்யப்படுகிறார் என அறிவித்தார்.

அதன்பின்னர் ஜூரி, மேடையில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவின் தலையில் இருந்த கிரீடத்தை அகற்றி, இரண்டாவது வெற்றியாளருக்கு அணிவித்து அவரை நிகழ்வின் வெற்றியாளராக அறிவித்தார்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்ததுடன் பாதிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வா, தான் விவாகரத்தானவர் இல்லை என அறிவித்ததுடன் பொலிஸிலும் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...