Main Menu

திருப்பதியில் பிடிபட்ட முகிலனிடம் சென்னையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணுஉலை, எதிர்ப்பாளரும் சமூக ஆர்வலருமான முகிலன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திடீரென மாயமானார். இந்த நிலையில் திருப்பதி ரெயில் நிலையத்தில் அவர் மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் போலீஸ் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் வாகனங்களை தீவைத்து எரித்தது. போன்றவை போலீஸ் உயர் அதிகாரிகளின் பேரில் திட்டமிட்டு நடந்ததாக முகிலன் குற்றம் சாட்டினார்.

கடந்த பிப்ரவரி மாதம் முகிலன் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்மந்தமாக போலீசுக்கு எதிரான வீடியோக்களை சென்னை பிரஸ் கிளப்பில் வெளியிட்டார். அதன் பிறகு அவர் சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு ரெயிலில் பொது பெட்டியில் பயணம் செய்தார்.

ஆனால் வழியில் திண்டிவனம் ரெயில் நிலையத்தில் இருந்து முகிலன் திடீரென மாயமானார். அவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதற்கிடையே முகிலனை கண்டுபிடிக்க ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது முகிலன் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என போலீசார் கோர்ட்டில் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி முகிலனை கண்டுபிடித்துள்ளதாகவும் அவர் உயிரோடு இருப்பதாகவும் 2 முறை ரகசிய அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதன் பிறகு அவரை கண்டுபிடித்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று அனைத்து தரப்பிலும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் திருப்பதி ரெயில் நிலையத்தில் முகிலனை பார்த்ததாக அவரது நண்பர் சண்முகம் சமூக வலைவளத்தில் தகவல் பரப்பினார்.

நேற்று திருப்பதி ரெயில் நிலையத்தில் போலீசார் காணாமல் போன முகிலனை கையை பிடித்து இழுத்து செல்வது போலவும், அப்போது அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகவும் கோ‌ஷமிட்டபடி செல்வது போலவும் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் அவரை அமர வைத்திருப்பது போலவும், வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இதனால் முகிலன் வி‌ஷயத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து திருப்பதி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறியதாவது:-

காலை 10.40 மணிக்கு திருப்பதி ரெயில் நிலையத்துக்கு வந்த மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு தாடியுடன் ஒருவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோ‌ஷமிட்டு கொண்டிருந்தார். அப்போது திருப்பதியில் தரிசனம் செய்து விட்டு திருப்பதி ரெயில் நிலையத்துக்கு ரெயில்வே அதிகாரி ஆய்வுக்கு வருவதாக தகவல் வந்தது.

இதையடுத்து அந்த நபரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்து அழைத்து சென்று விசாரணை நடத்தினோம். அதில் அவர் தான் வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் என்று கூறினார். அவரை 1-வது பிளாட்பாரம் வழியாக அழைத்து சென்ற போது ஜோலார்பேட்டையில் இருந்து ராஜமுந்திரி செல்லும் சேசாத்ரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த முகிலனின் நண்பர் சண்முகம் வந்து பார்த்து விட்டு முகிலனின் மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் தகவல் பரவியதை தொடர்ந்து தமிழக போலீசார் எங்களை தொடர்பு கொண்டு முகிலனை கைது செய்து விட்டீர்களா என்று அவரை பற்றிய விவரங்களை கேட்டனர்.

இதையடுத்து இரவு 7 மணியளவில் ரெயில்வே போலீசார் அவரை காட்பாடிக்கு அழைத்து சென்றனர் என்றனர்.

நேற்றிரவு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட முகிலன் காட்பாடி ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் வேலூர் டவுன் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.

காட்பாடி ரெயில்வே போலீசில் முகிலன் இருப்பதை அறிந்த சமூக ஆர்வலர்கள், நாம் தமிழர் கட்சியினர்.

அங்கு திரண்டு முகிலனை விடுவிக்கும் படி கோ‌ஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இரவு 11.50 மணிக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வஜ்ரவேலு தலைமையிலான போலீசார் முகிலனை மருத்துவ பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பரிசோதனைகள் முடிந்த பின் பலத்த பாதுகாப்புடன் காரில் சென்னைக்கு அழைத்து சென்றனர்.

இன்று காலை முதல்  அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகிரவும்...