Main Menu

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என த.தே.கூட்டமைப்பு இனி கூறமுடியாது- பொதுஜன பெரமுன

புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக, ஏக பிரதிநிதிகளாக வாதிடுவதற்கு உரிமையுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இனி கூறமுடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடத்திய ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதனடபோது, கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெற்றிருந்த நிலையில் இம்முறை 10 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர், தமிழ் மக்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது மாத்திரம் நம்பிக்கை கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முதலான கட்சிகளுக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கை கிடைத்துள்ளதாக பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாக்கும் வகையில் ஐ.தே.க.வின் ஆட்சியை பாதுகாப்பதற்காக சட்டம் உள்ளிட்ட அரசியல் ஆலோசனைகளை கூட்டமைப்பே வழங்கி வந்தது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், அந்த பெரும்பான்மைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதரவு வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனைவிட, 13ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபைக்கு 36 அதிகார கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவற்றை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் ஜீ.எல். பீரிஸ் கூறியுள்ளார்.

பகிரவும்...