Main Menu

தமிழகத்தோடு புதுச்சேரியை இணைக்கும் செய்தி: மாநில உரிமைக்காக சிறையும் செல்வேன்- நாராயணசாமி

தமிழகத்தோடு புதுச்சேரியை இணைக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் மாநில உரிமையைப் பாதுகாக்க சிறை செல்லவும் தயாரென புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இப்போதும் வேட்டி, சட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டு கைதுக்குத் தயாராகவே தான் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தோடு புதுச்சேரியை இணைக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியிருந்த நிலையில் அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யுமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் பா.ஜ.க.வினர் மனு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து புதுவை முதல்வர் நாராயணசாமி ஊடகங்களிடம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவிக்கையில், “மாநில அரசின் அதிகாரங்களை மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தொடர்ந்து பறித்து வருகிறது.

புதுச்சேரி அரசிடம் இருந்த நிலம், நிதி, மக்கள் திட்டங்களுக்கான அதிகாரங்களைப் பறித்து தமிழகத்தோடு இணைப்பது என்பதுதான் மத்திய பா.ஜ.க. அரசின் சதித் திட்டம்.

இதைக் கூறியதற்காக எனக்கு எதிராக புதுச்சேரி பா.ஜ.க.வினர் ஊர்வலம் நடத்துகின்றனர். தேசத்துரோக வழக்குப் பதிவுசெய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தேசத்துரோக வழக்குகளைப் பதிவுசெய்வது, அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கை எடுப்பது, சி.பி.ஐ.யை ஏவுவது என பா.ஜ.க. திட்டமிட்டுச் செயற்படுகிறது.

நான் இந்திராகாந்திக்காக ஏற்கெனவே சிறைக்குச் சென்றவன்தான். இப்போதும் இரண்டு வேட்டி, இரண்டு சட்டைகளை எடுத்து வைத்துக்கொண்டு சிறை செல்லத் தயாராக உள்ளேன். மக்கள் உரிமைக்காகவும், மாநில உரிமைகள் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்க சிறைக்குச் செல்லவும் தயாராகவே உள்ளேன்.

புவையில் உள்ள எதிர்க்கட்சிகள் தூங்கிக்கொண்டிருக்கிறன. ஒருபுறம் மாநில உரிமை பறிக்கப்படுகிறது. மறுபுறம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியால் நலத்திட்டங்கள் தடுக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் எதிர்க்கட்சிகள் வேடிக்கை பார்க்கின்றன” என அவர் குறிப்பிட்டார்.

பகிரவும்...