Main Menu

தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசும்போது டி.வி. பேட்டியில் இளவரசி மேகன் கண்ணீர்

அமெரிக்க நடிகை மேகன் மெர்கல். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்து வளர்ந்த அவர் படிக்கிறபோதே நடிக்க வந்து பெயர் பெற்றவர்.

அவர் இங்கிலாந்து இளவரசர் ஹாரியை காதலித்தார். அவர்களது காதலை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் குடும்பம் அங்கீகரித்தது.

அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி வின்ட்சர் கோட்டை தேவாலயத்தில் இவர்களது திருமணம், கோலாகலமாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடிகை மேகன், இளவரசி மேகன் ஆக மாறினார்.

ஹாரி, மேகன் தம்பதியருக்கு கடந்த மே மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது. குட்டி இளவரசருக்கு ஆர்சீ ஹாரிசன் மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என பெயர் சூட்டப்பட்டது.

இளவரசி மேகனை, மறைந்த அவரது மாமியாரும், இளவரசர் ஹாரியின் தாயாருமான இளவரசி டயானாவை பின்தொடர்ந்ததுபோல ஊடகத்தினர் பின் தொடர்வது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

இளவரசி மேகன் தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை இங்கிலாந்து நாளிதழ் ‘மெயில்’ வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அந்த நாளிதழ் மீது அவர்கள் வழக்கு தொடுப்பதாக இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அறிவித்தனர்.

தனது மனைவி மேகனை ஊடகத்தினர் பின்தொடர்வது குறித்து இளவரசர் ஹாரி வருத்தமும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் ஆப்பிரிக்க பயணம் மேற்கொண்டனர். இதையொட்டி ‘ஹாரி அண்ட் மேகன்: ஆன் ஆப்பிரிக்கன் ஜர்னி’ ( ‘ஹாரி மற்றும் மேகன்: ஒரு ஆப்பிரிக்க பயணம்’) என்ற பெயரில் இங்கிலாந்தில் உள்ள ஐடிவி (இண்டிபென்டன்ட் டிவி) ஒரு செய்திப்படம் தயாரித்துள்ளது.

இந்த செய்திப்படத்துக்காக இளவரசி மேகனை அந்த டி.வி.யின் நிருபர் பேட்டி கண்டார். அந்த பேட்டியின்போது இளவரசி மேகன், தாய்மை அடைந்து ஒரு குழந்தையை சுமந்து பெற்றெடுத்ததின் தாக்கங்களை சமாளிப்பதற்கு தான் கஷ்டப்பட்டதாக மனம் திறந்து கூறினார்.

“எந்த ஒரு பெண்ணும் குறிப்பாக ஒரு குழந்தையை கருவில் சுமக்கிறபோது, உண்மையிலே பாதிக்கப்படுகிறார். அது மிகவும் சவாலானது. புதிதாக ஒரு குழந்தை பிறந்த பின்னர் என்ன நடக்கும் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஒரு பெண்ணாக பல விஷயங்கள் உள்ளன. புதிதாக திருமணம் செய்து கொள்கிறபோது மனைவியாக… ஒரு குழந்தையை பெற்றெடுக்கிறபோது புதிய தாயாக இருக்க முயற்சிக்கிறோம்” என கூறிய போது இளவரசி மேகனின் கண்களில் கண்ணீர் திரண்டது.

ஆனால் அதை அவர் கஷ்டப்பட்டு மறைத்துக்கொண்டார்.

தனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் பற்றி கேட்டதற்காக ஐடிவி நிருபருக்கு இளவரசி மேகன் நன்றி தெரிவித்தார்.

அப்போது அவர், “ நீங்கள் இதையெல்லாம் கேட்டதற்காக நன்றி. நான் சரியாகி விட்டேனா என்று நிறைய பேர் கேட்பதில்லை. ஆனால் திரைக்கு பின்னால் செல்வது மிகவும் உண்மையான விஷயம்” என்றார் மேகன்.

இளவரசி மேகனின் பேட்டி அடங்கிய ஆவணப்படம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஐடிவியில் ஒளிபரப்பாகிறது.

இதுபற்றிய முன்னோட்டம் அந்த டி.வியில் நேற்று முன்தினம் வெளியாகி டுவிட்டரில் ‘வீ லவ் யூ மேகன்’ என்ற பெயரில் ஒரு ஹேஷ்டேக் உருவாகி அது ‘டிரெண்ட்’ ஆகி விட்டது. பல்லாயிரக்கணக்கானோர் இளவரசி மேகனுக்கு ஆறுதலும், ஆதரவும் தெரிவித்தனர்.

பகிரவும்...