Main Menu

டிக்ரே மோதலில் சர்வதேச நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது- எத்தியோப்பியா திட்டவட்டம்!

எத்தியோப்பியாவில் மத்திய அரசாங்கத்துக்கும் அந்த நாட்டின் டிக்ரே மாகாணத்துக்கும் இடையிலான மோதல் விவகாரத்தில், சர்வதேச நாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என்று பிரதமர் அபை அகமது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று (புதன்கிழமை) கூறுகையில், ‘எத்தியோப்பியா குறித்து நட்பு நாடுகள் அக்கறை காட்டுவதைப் பாராட்டுகிறோம்.

ஆனால், எங்களது உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேச தலையீட்டை ஒருபோதும் ஏற்கமாட்டோம். எனவே, அத்தகைய முயற்சிகளை எந்த நாடும் மேற்கொள்ள வேண்டாம்.

எத்தியோப்பியாவில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காகவே டிக்ரே மாகாணப் படையினருக்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என கூறினார்.

முன்னதாக தங்கள் நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள டிக்ரே மாகாண அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று எத்தியோப்பிய அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது.

எத்தியோப்பிய ஆளும் கட்சிக் கூட்டணியில் மிக முக்கியப் பங்கு வகித்து வந்த டிக்ரே மக்கள் விடுதலை முன்னணி (டிபிஎல்எஃப்), நாட்டின் பிரதமராக அபை அகமது கடந்த 2018ஆம் பிரதமராகப் பொறுப்பேற்றதிலிருந்து மத்திய அரசாங்கத்தை எதிர்த்து வருகிறது.

அபை அகமது தடை விதித்திருந்த தடையையும் மீறி, மாகாணத் தேர்தலை கடந்த செப்டம்பர் மாதம் டிக்ரே அரசாங்கம் நடத்தியது. இது, மத்திய அரசாங்கத்துக்கும் டிக்ரே மாகாண அரசாங்கத்துக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், டிக்ரே மாகாணத்திலுள்ள இராணுவ நிலையொன்றின் மீது டிபிஎல்எஃப் படையினர் தாக்குதல் நடத்தியதாக கடந்த 4ஆம் திகதி குற்றம் சாட்டிய அபை அகமது, மாகாணப் படையினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தும்படி இராணுவத்துக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...