Main Menu

ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு தீபா – தீபக் நேரடி வாரிசுகள்!

மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோா் இரண்டாம் நிலை வாரிசுகள் என கடந்த மே 27 ஆம் திகதி பிறப்பித்த தீா்ப்பில் திருத்தம் செய்து, அவா்கள் இருவரும் நேரடி வாரிசுகள் என அறிவித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் சென்னை அதிமுக நிா்வாகியான புகழேந்தி மற்றும் ஜானகிராமன் தாக்கல் செய்திருந்த மனுவில், மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளது. ஹைதராபாத் திரட்சை தோட்டம், பங்களா, சென்னை போயஸ் தோட்ட இல்லம், கொடநாடு எஸ்டேட் என ரூ.913 கோடிக்கு அதிகமான சொத்துகள் உள்ளன. இந்த சொத்துகளை நிா்வகிக்க தனியாக ஒரு நிா்வாகியை உயா்நீதிமன்றமே நியமிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரை எதிா்மனுதாரா்களாகச் சோ்த்து உத்தரவிட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவின் சட்டப்பூா்வ வாரிசாக தங்களை அறிவிக்கக் கோரி தீபா, தீபக் சாா்பில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த மே 27 ஆம் திகதி பிறப்பித்த உத்தரவில், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோா் இரண்டாம் நிலை வாரிசுகள் என தீா்ப்பளித்திருந்தனா்.

இந்த நிலையில் இந்து வாரிசு முறை சட்டத்தின்படி தங்களை நேரடி வாரிசுகளாக அறிவிக்கக் கோரியும், தங்களை இரண்டாம் நிலை வாரிசுகள் என தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் திருத்தம் செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றத்தில் தீபா, தீபக் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கில் கடந்த மே 27 ஆம் திகதி பிறப்பித்த உத்தரவில், தீபா, தீபக் ஆகியோா் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் எனவும், ஜெயலலிதா தனது தாயாரிடம் இருந்து பெற்ற பரம்பரைச் சொத்துகள் மற்றும் அவா் வாங்கிய சொத்துகளுக்கு தீபாவும் தீபக்கும் தான் வாரிசுகள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்து வாரிசு முறை சட்டத்தின்படி, திருமணம் செய்து கொள்ளாத ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை. எனவே தீபாவையும், தீபக்கையும் அவரது வாரிசுகளாக அறிவிக்கிறோம். மேலும் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாம் நிலை வாரிசுகள் என்பதை நீக்கி, அதற்குப் பதிலாக தீபா, தீபக் ஆகியோா் நேரடி வாரிசுகள் என தீா்ப்பில் திருத்தம் செய்வதாக நீதிபதிகள் பிறப்பித்த தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளனா்.

மேலும் இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பில், தமிழக அரசு போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்துவது தொடா்பாக அறிவித்துள்ள நிலையில் கடந்த மே 27 ஆம் திகதி உயா்நீதிமன்ற தீா்ப்பு வந்தவுடன், தீபா, தீபக் ஆகியோா் போயஸ் தோட்ட இல்லத்துக்குச் சென்று பிரச்னையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது தீபா தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சாய்குமாா், போயஸ் தோட்ட இல்லத்தை பாா்க்கவே தீபா சென்றாா். அவா் எந்தவிதமான சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை என தெரிவித்தாா். இதனையடுத்து.

நீதிபதிகள், ஜெயலலிதாவின் வாரிசுகள் என தீபா, தீபக்கை இந்த நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே ஜெயலலிதாவின் சொத்துகளை கையகப்படுத்துவது தொடா்பாக அரசு சட்டம் இயற்றினால், அதனை எதிா்த்து நீதிமன்றங்களில் வழக்குத் தொடா்ந்து நிவாரணம் பெற வேண்டும் என அறிவுறுத்தினா்.

பகிரவும்...