Main Menu

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 22-ந்தேதி பிரான்ஸ் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக 22-ந்தேதி (வியாழக்கிழமை) பிரான்ஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஜி-7 மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.

இந்தியா-பிரான்ஸ் இடையே நல்லுறவு நீடித்து வரும் நிலையில், இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) அரசு முறை பயணமாக பிரான்ஸ் செல்கிறார். அன்று மாலையில் தலைநகர் பாரீசை அடையும் அவர், உடனடியாக அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசுகிறார்.

அப்போது இருநாட்டு உறவுகளை மேம்படுத்துதல், ராணுவம், அணுசக்தி, கடல்வழி ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட முக்கியமான துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக பேசுகின்றனர். அன்று இரவில் பிரதமர் மோடிக்கு, இம்மானுவேல் மேக்ரான் இரவு விருந்து அளிக்கிறார்.

மறுநாள் (23-ந்தேதி) காலையில் பிரான்ஸ் பிரதமர் எடோவர்ட் சார்லஸ் பிலிப்பை சந்தித்து பேசும் பிரதமர் மோடி, பின்னர் பாரீசில் வசித்து வரும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இதைத்தொடர்ந்து கடந்த 1950 மற்றும் 1966-ம் ஆண்டுகளில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துகளில் உயிரிழந்த இந்தியர்களின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவுச்சின்னம் ஒன்றை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

பின்னர் அன்றே பிரான்சில் இருந்து பிரதமர் மோடி அமீரகத்துக்கு புறப்படுகிறார். அங்கிருந்து 24-ந்தேதி பக்ரைன் செல்லும் பிரதமர், 25-ந்தேதி மீண்டும் பிரான்சின் பியாரிட்ஸ் நகருக்கு செல்கிறார். அங்கு 25 மற்றும் 26-ந்தேதிகளில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். இந்த அமைப்பில் இந்தியா உறுப்பினர் இல்லை என்றாலும், நட்பு நாடு என்ற முறையில் இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த 2 நாள் மாநாட்டில் சுற்றுச்சூழல், காலநிலை, பெருங்கடல் மற்றும் டிஜிட்டல் பரிமாற்றங்கள் குறித்து பிரதமர் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாநாட்டுக்கு இடையே ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்களை தனித்தனியாக பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார். இதில் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக பேசப்படுகிறது.

காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகளை திருப்ப முயன்று வரும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய முக்கியமான நாடுகளுடன் இந்தியாவின் கருத்துகளை எடுத்துக்கூறும் வாய்ப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. 

பகிரவும்...