Main Menu

ஜனாதிபதியின் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் எமது நாட்டின் இஸ்லாமியர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பிருந்து புதிய பிறை பார்த்து கொண்டாடும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இஸ்லாமிய சமய நாட்காட்டியில் ஒரு முக்கிய பண்டிகையாகும்.

இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றான அஸ் ஸவ்ம் அல்லது ரமழான் நோன்பு உலகாயத ஆசைகளில் இருந்து விலகி ஒரு தூய முன்னுதாரணமான வாழ்வொழுங்கைப் பின்பற்றி வாழ்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது.

உலகெங்கிலும் பசியினால் வாடுவோருக்கு உதவுவதற்கும் உள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கான ஆற்றலை வளர்த்துக்கொள்வதற்கும் இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் என இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

முன்னெப்போதுமில்லாத வகையில் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு முழு உலகமும் முகம்கொடுத்துள்ள இதுபோன்றதொரு காலகட்டத்தில் அடுத்த மனிதர்கள் பற்றிய சமூக பிரக்ஞை மற்றும் உளக் கட்டுப்பாட்டின் மூலமே நல்ல சூழலொன்றை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதே ரமழான் உலகிற்கு வழங்கும் செய்தியாகும்.

இலங்கை சமூகத்தில் இஸ்லாமிய சகோதரத்துவம் வரலாறு நெடுகிலும் உலகிற்கு முன்னுதாரணமானதாகும்.

ஒரு சில தீவிரவாதிகளின் நடத்தைகளினால் அந்த சகோதரத்துவம் பாதிப்படைய நாம் இடமளிக்கக் கூடாது. தீவிரவாதம் இஸ்லாத்தின் அடிப்படைப் பெறுமானங்களுக்கு எதிரானது என்பது உண்மையான இஸ்லாமியர்களின் நம்பிக்கையாகும்.

எனவே, நம்பிக்கையீனம், சந்தேகங்களை கலைந்து புனித அல்குர்ஆனின் போதனைகளை ஆழ்ந்து பின்பற்றுவதற்கு  இந்த ரமழான் சிறந்த சந்தர்ப்பமாகும் என நான் நம்புகிறேன்.

ரமழானின் மூலம் கிடைக்கும் உயர் பெறுமானங்கள் உலகிற்கு அமைதியை கொண்டுவரட்டும் என்ற எதிர்பார்ப்புடன் இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பகிரவும்...