Main Menu

ஜனாதிபதித் தேர்தல் குறித்த நிலைப்பாட்டை அறிவித்தது புளொட்

புதிய ஜனநாயக முன்னணியின்  ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரிக்க தமிழீழ மக்கள் விடுதலை கழகம்( புளொட்) தீர்மானம் எடுத்துள்ளதுடன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ ) தீர்மானம் நாளை அறிவிக்கப்படும்.

தமிழரசு கட்சி தனித்து தீர்மானத்தை அறிவிக்காது கூட்டமைப்பாக இணைந்து தீர்மானத்தை அறிவித்திருந்தால் ஆரோக்கியமாக இருந்திருக்கும் என்கிறார் தர்மலிங்கம் சித்தார்த்தன். 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தீர்மானம் எடுத்துள்ள நிலையில் ஏனைய இரண்டு பங்காளிக் கட்சிகளான ரெலோ, புளொட் கட்சிகளின் நிலைப்பாடுகள் இன்னமும் அறிவிக்கப்படாது உள்ள நிலையில் அவர்களின் நிலைப்பாடுகள் குறித்து வினவியபோதே அவர்கள் இதனை கூறினார்கள்.

இது குறித்தி  தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ )தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூறுகையில், 

நாம் கட்சியாக இன்னமும் தீர்மானம் ஒன்றினை எடுக்கவில்லை. நாளைய தினம் எமது கட்சியின் உறுப்பினர்கள் கூடி எமது நிலைப்பாடுகள் குறித்து ஆராயவுள்ளோம். 

இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானம் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அதேபோல் வெறுமனே ஒரு வேட்பாளரை வீழ்த்த இன்னொரு வேட்பாளருக்கு அர்த்தமற்ற ஆதரவை வழங்கவும் முடியாது. நாம் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றால் எமது மக்கள் சார் விடயங்களில்  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

அவ்வாறு இல்லாது ஒரு வேட்பாளரை வெற்றிபெற செய்ய எமது மக்களை ஏமாற்ற முடியாது. சில தீர்மானங்களில் நாம் உறுதியாக உள்ளோம். எமது நிலைப்பாடுகள் குறித்து நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் பேசுவோம். எம்முடன் பேசவும் அவர் தயாராக உள்ளார். நாளைய தினம் நாம் எமது தீர்மானத்தை அறிவிப்போம் என்றார்.

எனினும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ ) உறுப்பினர்கள் இடையில் தொடர்ந்தும் இரு வேறுபட்ட நிலைப்பாடுகள் கானப்படுகின்றதாக அறிய முடிகின்றது. தாம் எந்தவொரு வேட்பாளரையும் ஆதரிக்காது மக்களின் விருப்பில் வாக்களிக்க வேண்டும்  என்பதை அறிவிப்போம் என்ற கருத்தும் கட்சிக்குள் நிலவுகின்றது. 

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் சித்தார்த்தன் இது குறித்து கூறுகையில், “நாம் ஏற்கனவே ஒரு தீர்மானத்தை எடுத்து அதில் உறுதியாக உள்ளோம். இது ஒரு மாதத்துக்கும் முன்னமே எடுக்கப்பட்ட தீர்மானம். அதாவது நாம் இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஒருவரை  ஆதரிப்பது, அதில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதே சரியான தெரிவு என்பதை நாம் கூறிவிட்டோம். இப்போதும் நாம் அந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளோம்.

எமது நோக்கம் என்னவெனில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளருடன் நிற்க வேண்டும் என்பதே. அதில் எமது தலைமைகள் தனித்தனி தீர்மானம் எடுக்க வேண்டியதில்லை. கூட்டமைப்பாக ஒரு தீர்மானத்தை வெளிப்படுத்தியிருந்தால் இன்னமும் ஆரோக்கியமானதாக இருந்திருக்கும். எவ்வாறு இருப்பினும் இப்போதும் நாம் ஒற்றுமையாக தமிழ் மக்களின் நலன்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே எமது உறுதியான நிலைப்பாடு. 

ஆதரவு விடயத்தில் பிரதமர் என்னை தொலைபேசியில் அழைத்து பேசினார்.எமது ஆதரவு குறித்து வினவினார். நாம் ஏற்கனவே எடுத்த தீர்மானம் குறித்து அவருக்கு கூறினேன். செல்வம் அடைக்கலநாதன் எம்.பியின் நிலைப்பாடு குறித்து அவருடன் பேசுவதாக கூறினார்.

எவ்வாறு இருப்பினும் எமது முழுமையான ஆதரவை சஜித் பிரேமதாசவின் வெற்றுக்காக வழங்க வேண்டும், அவ்வாறு உங்களின் ஆதரவு எமக்கு கிடைக்கும் என தான் நம்புவதாக என்னிடம் கூறினார்” என்றார். 

பகிரவும்...