Main Menu

ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு வட-கிழக்கிலுள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும்- சுரேஸ்

வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகள் முன்னெடுக்கும் ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு வட.கிழக்கிலுள்ள அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் ஆதரவு வழங்க முன்வரவேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தர்மலிங்கம் சுரேஸ் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு- கிழக்கில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராகவும் அவற்றினை சர்வதேசத்தின் கவனத்தினை ஈர்க்கும் வகையிலும் முன்னெடுக்கும் இந்த போராட்டத்திற்கு அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

மேலும் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களுக்கு ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் வட-கிழக்கில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற தீவிரமான நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழ் மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பேணுகின்ற இடங்கள் சிதைக்கப்படுவதனை தடுக்கும் முகமாகவும் பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்கள் சார்பாக ஐ.நா மனிதவுரிமைப் பேரவையில் அரசியற் கட்சிகளாலும் சிவில் அமைப்புகளாலும் ஒருங்கிணைக்கப்பட்டு, எங்களுடைய மக்களுக்கான சரியான நிரந்தரமான தீர்வை பெறுவதற்காக முன்வைக்கப்பட்டிருக்கின்ற பிரேரணையை வலுப்படுத்தும் முகமாகவும் வடக்கு கிழக்கில் எதிர்வருகின்ற 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை ஜனநாயக ரீதியான ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு அவர்கள் அறிவித்திருக்கின்றார்கள்.

ஆகவே, இந்த போராட்டத்துக்கு அரசியல் பேதங்களை மறந்து தமிழர்கள் என்ற அடிப்படையில் வர்த்தக அமைப்புக்கள், பொதுஅமைப்புகள்,மதகுருக்கள் என அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...