Main Menu

செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் – 19ஆவது ஆண்டு நிறைவு!

உலகையே உலுக்கிய ‘செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலில்’ உயிரிழந்தவர்களுக்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அத்துடன், அரசியல் தலைவர்கள் மற்றும் உலக தலைவர்கள் என பலரும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த அஞ்சலி நிகழ்வின் போது உயிரிழந்தவர்களின் சொந்தங்கள், மலர் கொத்து மற்றும் மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி, அமெரிக்க நேரப்படி சரியாக காலை 8.45 மணிக்கு நியூயோர்க்கில் அமைந்துள்ள வர்த்தக மைய கட்டடத்தின் வடக்கு கோபுரத்தில் விமானம் ஒன்று மோதியது. வடகோபுரம் 102 நிமிடங்கள் பற்றி எரிந்து நொறுங்கியது.

வொஷிங்கடன்னில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகரத்துக்கு 81 பயணிகள் மற்றும் 11 பணியாளர்களுடன் பறந்த அமெரிக்க எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் தான் இரட்டை கோபுரத்தின் மீது மோதியது.

தொடர்ந்து 18 நிமிடங்கள் இடைவெளியில், அதாவது காலை 9:03க்கு மற்றொரு விமானம் இரட்டை கோபுரத்தின் தெற்கு கட்டடத்தின் மீது மோதியது. தென்கோபுரம் 56 நிமிடங்கள் தீப்பிடித்து எரிந்து பிறகு நொறுங்கி விழுந்தது. இந்த விமானமும் அதே வொஷிங்கடன் விமான நிலையத்தில் இருந்து 56 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் புறப்பட்ட விமானம்.

இந்த தாக்குதலுக்குப் அல் கொய்தா தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 19 பேரை இழந்து அல் கொய்தா இந்த தாக்குதலை நடத்தியிருந்தது.

இந்த நேரத்தில் நான்காவதாக மற்றொரு விமானம் கடத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. எந்த இடத்தில் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் பென்சில்வேனியா மாகாணம் அருகே வெட்ட வெளியில் விமானம் விழுந்து நொருங்கியது.

இது குறித்து பின்நாளில், நான்காவதாக கடத்தப்பட்ட விமானத்திலிருந்த தீவிரவாதிகளுடன், அதில் வந்த பயணிகள் சண்டையிட்டதன் காரணமாகவே வெட்ட வெளியில் விழுந்து நொறுங்கியது என அதிகாரிகள் கூறினர். இந்த விமானம் தாக்கச் சென்ற இடம் எது என இப்போது வரை மர்மமாகவே இருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் இதை அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பு வகித்த புஷ் தான் செய்திருக்கிறார் என்றும் சிலர் குற்றம் சாட்டினர். இந்த தாக்குதல் தொடர்பாகப் பல ஆவணப்படங்கள் வெளிவந்தது.

இந்த தாக்குதலின் விளைவாக ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினரின் போர் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

அல் கொய்தா அமைப்பின் தலைவன் ஒசாமா பின் லேடனை பிடித்து கொடுப்பவர்களுக்கு அமெரிக்க டொலர் மதிப்பில் 25 மில்லியன் டொலரைச் சன்மானமாக வழங்குவதாக ஓர் அறிவிப்பை எப்பிஐ அப்போது வெளியிட்டிருந்தது.

அந்த தாக்குதலில் 19 தீவிரவாதிகள் உட்பட மொத்தம் 2,996 பேர் உயிரிழந்தனர். தாக்குதலால் இரட்டை கோபுரத்தில் ஏற்பட்ட தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வீரர்களில் 300 பேரும் உயிரிழந்தவர்களின் பட்டியலில் அடங்குவர். இந்த தாக்குதலால், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். தாக்குதலின்போது ஏற்பட்ட தூசி, புகை காரணமாக 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இப்போதும் அவதிப்பட்டு வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இந்த தாக்குதலை நடத்திய அல் கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடனை பாகிஸ்தானில் ஒரு சுரங்கத்தில் பதுங்கி இருப்பதை அறிந்து அமெரிக்கா விமானங்களின் மூலம் இராணுவத்தை அனுப்பி 2011ஆம் ஆண்டு மே 2ஆம் திகதி கொன்றது.

பகிரவும்...