Main Menu

சூடானில் பதற்றம்: பிரதமர் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சிறை பிடித்தது இராணுவம்!

சூடானில் உள்ள இராணுவப் படைகள் பிரதமர் அப்தல்லா ஹம்தோக்கை, வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அல் ஹதாத் தொலைக்காட்சி செய்தியின் படி, இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டின் சிவில் தலைமையின் பல உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் தொலைத்தொடர்பு அணுகல் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ளவர்களுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினமாக உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கார்டூம் நகரத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளையும் பாலங்களையும் இராணுவம் தடுத்துள்ளது. இங்குதான் அரச நிறுவனங்கள் உள்ளன. அங்குதான் ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகங்கள் உள்ளன.

சூடான் அரச தொலைக்காட்சி தேசபக்தி பாடல்களை ஒளிபரப்பியதுடன், இராணுவத்திடம் இருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை.

இதற்கிடையில், நாட்டின் முக்கிய ஜனநாயக சார்பு அரசியல் குழுவான சூடான் தொழில்முறை சங்கம், இராணுவத்தின் நகர்வுகளை வெளிப்படையான இராணுவ சதி என்று அழைத்தது மற்றும் பொதுமக்களை வீதிகளில் இறங்க போராட அழைப்பு விடுத்தது.

அடையாளம் தெரியாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, சவுதிக்கு சொந்தமான ஒளிபரப்பு நிறுவனம், இன்று அதிகாலை பிரதமரை வீட்டுக் காவலில் வைப்பதற்கு முன்பு அவரது வீட்டை இராணுவம் முற்றுகையிட்டதாகக் கூறியுள்ளது.

கைத்தொழில் அமைச்சர் இப்ராஹிம் அல்-ஷேக் மற்றும் சூடானின் தலைநகர் கார்ட்டூமின் ஆளுநர் அய்மன் காலித் ஆகியோர் கைது செய்யப்பட்ட மற்ற சிவிலியன் அதிகாரிகளில் அடங்குவதாக குடும்ப வட்டாரங்கள் தெரிவித்தன.

தகவல் அமைச்சர் ஹம்ஸா பலூல், பிரதமரின் ஊடக ஆலோசகர் பைசல் முகமது சாலே மற்றும் சூடானின் ஆளும் இறையாண்மை சபையின் செய்தித் தொடர்பாளர் முகமது அல்-ஃபிகி சுலிமானும் கைது செய்யப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சூடானின் பொதுமக்கள் மற்றும் இராணுவத் தலைவர்களுக்கு இடையே பல வாரங்களாக அதிகரித்து வரும் பதற்றங்களுக்குப் பிறகு இந்த கைதுகள் வந்துள்ளன.

சூடானின் நீண்டகாலத் தலைவரான உமர் அல்-பஷீரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக இராணுவம் மற்றும் சிவிலியன் குழுக்களுக்கு இடையே கசப்பான குற்றச்சாட்டுகள் கட்டவிழ்த்துவிட்டு வந்த நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு பல மாதங்களாக நடந்த வீதிப் போராட்டங்களுக்குப் பிறகு அல்-பஷீர் தூக்கியெறியப்பட்டார். மேலும் 2023ஆம் ஆண்டின் இறுதியில் தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் அவரை அகற்றிய பின்னர் அரசியல் மாற்றம் ஒப்புக்கொள்ளப்பட்டது.

பகிரவும்...