Main Menu

சுவிஸ் தூதரக பெண் விவகாரம் அமெரிக்காவின் பின்னணியிலா? – வெளியான தகவல்

இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் கடத்தப்பட்டமை உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவுக்கு எந்தவொரு தொடர்புமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறியமை குறித்தும் அமெரிக்காவுக்கு தொடர்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்றமை தொடர்பான அவதானத்தினை திசை திருப்பும் நோக்கத்திலேயே தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாக சித்தரிக்கப்பட்டிருக்க கூடும் என்று குறிப்பிட்ட ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதியும் இராஜதந்திரியுமான தமரா குணநாயகம் அவ்வாறு திசை திருப்பும் செயற்பாட்டில் அமெரிக்கா பின்னணியில் இருக்கலாம் என்று குற்றச்சாட்டுக்களை அடுக்கியிருந்தார்.

இந்நிலையில் தமரா குணநாயகத்தின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கொழும்பில் உள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்க தூதுரகத்தின் பொது அலுவல்கள் அதிகாரி டேவிட் ஜேமெக்குவயாரிடம் வினவியதில், அதற்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகப் பெண் ஊழியர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இலங்கைச் சட்டங்களுக்கு உட்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. எம்மைப் பொறுத்தவரையில் இந்த விடயத்துடன் அமெரிக்கா எவ்விதத்திலும் சம்பந்தப்படவில்லை.

சதி ஊகக் கருத்துக்களை உருவாக்குவதானது இந்த விடயத்தினை சட்டத்தின் ஆட்சிக்கும், சர்வதேச நியமங்களுக்கும் உட்பட்ட வகையில் தீர்ப்பதற்கு ஒருபோதும் உதவப்போவதில்லை” என்றார்.

இதேவேளை, ஐ.நா.வுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர வதிவிட பிரதிநிதியும் இராஜதந்திரியுமான தமரா குணநாயகம தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின்போது, “சுவிஸ் தூரதரப் பெண் ஊழியர் கடத்தப்பட்ட விடயம் சம்பந்தமாக குறித்த ஊழியரிடத்தில் நமது நாட்டு விசாரணையாளர்களே கலந்துரையாடி விசாரணைகளைப் பெறவேண்டும்.

ஆனால் அவ்வாறில்லாது சுவிஸ் தூதரே கடத்தப்பட்ட பெண் ஊழியருடன் உரையாடுகின்றார். அது தவறான முன்னுதராணமாகும். அத்துடன் முறைப்பாடு இன்றி அவருடைய பெயர் வெளிப்படாது விசாரணைகளை முன்னெடுக்குமாறும் கோருகின்றனர்.

மேலும் கடத்தப்பட்டவர் எங்கிருக்கின்றார் என்றோ, பெயர் குறிப்பிடாதோ எவ்வாறு விசாரணைகளை முன்னெடுப்பது? இது அவர்களின் நாடல்லவே. இந்த நாட்டில் உள்ள சட்டங்களுக்கு அமைவாகவே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இணையதளத்தில் சுவிஸ் தூதரக ஊழியரின் கடத்தல் சம்பந்தமாக சுவிஸ் தூதரகத்தினால் வெளியிடப்பட்ட தகவல்கள் மட்டுமே பதிவேற்றப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் வெளியீடுகள் எவையும் அங்கு உள்வாங்கப்படவில்லை. வெள்ளை வேன் கலாசரத்தின் பின்னணியில் கோட்டாபய ராஜபக்ஷவே உள்ளார் என்றே சித்தரிக்கப்படுகின்றது. ஆகவே அவ்வாறான கதையொன்றை மீண்டும் உருவாக்குவதற்கே முயற்சிக்கப்படுகின்றது.

ஒருவரைக் கடத்தும் குற்றச்செயலை புரிவதென்றால் வெள்ளை வேனைத்தான் கொண்டு செல்ல வேண்டும் என்றில்லையே. கறுப்பு, சிவப்பு நிறத்திலான வாகனங்களையும் கொண்டு செல்ல முடியுமல்லவா? சுவிஸ் தூதரகத்தின் அறிக்கையிலும் வெள்ளை வேன் என்று கூறப்பட்டிருக்கவில்லை.

அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக கூறப்பட்டள்ள நிலையில் ராஜித சேனாரத்ன மட்டுமே வெள்ளை வேன் என்று கூறுகின்றார். அவருக்கு எவ்வாறு அந்த விடயம் தெரிந்துள்ளது? அப்படியென்றால் கடத்தல்காரர்களுடன் அவருக்கு தொடர்பு இருக்கின்றதா என்ற கேள்வி எழுகின்றது” என்றார்.

அத்துடன், நிஷாந்த சில்வா நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு சுவிஸ் தூதரகம் உரிய விசா நடைமுறையை பின்பற்றியுள்ளதா என்பது தொடர்பாக கருத்து வெளியிட்ட தமரா, “சனிக்கிழமையே விசா அனுமதி பெற்று மறுதினமான ஞாயிற்றுக்கிழமையே அவர் வெளியேறிவிட்டார்.

சதாரணமாக சுற்றுலா விசா பெறுவது என்றால் கூட எமக்கு ஆகக்குறைந்தது இருவாரங்கள் தேவைப்படும். வங்கிக் கணக்கில் நிலுவை காண்பித்தல் உள்ளிட்ட பல நடைமுறைகள் உள்ளன. அவ்வாறிருக்க ஒரே நாளில் நிஷாந்தவுக்கு விசா கிடைத்தமையானது ஆச்சரியமான விடயமாகும். அவ்வாறு அவசரமாக விசா வழங்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தினை நாம் சிந்திக்க வேண்டும்” என்றார்.

பலத்த சவாலுக்கு மத்தியில் நிஷாந்த சில்வாவை இந்த நாட்டிலிருந்து அனுப்புவதற்கு சுவிஸ் தூதரத்திற்குள்ள தேவைப்பாடு தொடர்பாக குறிப்பட்ட அவர், “இந்த விடயத்தில் அமெரிக்காவும் பின்னணியில் இருப்பதாகவே நான் கருதுகின்றேன். அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தமது இராணுவத் தேவைகளுக்காக இலங்கையை பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கின்றது.

எமது நாட்டிலிருந்து இந்தியா, சீனா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் ஆதிக்கம் செலுத்த முடியும். ஏன் தாக்குதல்களைக் கூட நடத்தலாம். ரஷ்யாவையும் கட்டுப்படுத்தலாம். அதனைவிடவும் அமெரிக்காவிடத்தில் விண்வெளியில் முகாம் அமைத்து தாக்குதல் நடத்தும் நிகழ்ச்சித் திட்டமொன்றும் உள்ளது. அதற்குரிய கனிமங்கள் எமது நாட்டின் பூமிக்கடியிலும், கரையோரத்திலும் காணப்படுகின்றது.

அதனைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்காவனது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு நெருக்கடிகளை அளிப்பதற்கு முனைகின்றது. ஆனால் தற்போதைய இலங்கை அரசாங்கத்திற்கு அவ்வாறான நெருக்கடிகளை இலங்கை அரசாங்கத்தினால் அளிக்க முடியாது என்ற மனநிலை காணப்படுகின்றது.

ஆகவே தான் சுவிஸ் போன்ற நடுநிலை நாடுகளை முன்னிலைப்படுத்தி அமெரிக்கா செயற்பட விளைகின்றது” என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிஷாந்த சில்வாவின் வெளியேற்றம், சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கடத்தல் ஆகியவை தொடர்பாக இராஜதந்திரி என்ற வகையில் தனது கருத்தை வெளியிட்ட தமரா, “போர் நிறைவுக்கு வந்த காலம் முதல் நாம் மனிதக் கொலைகளை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் தொடர்கின்றன.

அதற்கான சாட்சி ஆவணங்களை வெளிநாடுகளில் உள்ளவர்கள் சேகரித்து வருகின்றார்கள். நிஷாந்த சில்வாவிடத்தில் முக்கிய விசாரணைகளை மேற்கொண்டமையால் மூலோபய ஆவணங்கள் அனைத்தும் அவரிடத்தில் உள்ளன. அதனை விடவும் அவர் 1500இற்கும் மேற்பட்ட கைரேகை அடையாளங்களையும் விசாரணைகளின்போது பெற்றுக்கொண்டுள்ளார். இவை அனைத்தையும் அவர் எடுத்துச் சென்றுள்ளார்.

அவர் எடுத்துச் சென்ற ஆவணங்களை எதிர்வரும் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பயன்படுத்த முடியும். ஆகவே இந்த விடயங்களிலிருந்து எம்மை திசை திருப்பும் முகமாகவே ஊழியர் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஊழியர் கடத்தல் விவகாரம் இடம்பெற்றதும் பாரதூரமான விடயமான நிஷாந்த சில்வாவிலன் வெளியேற்ற நிகழ்விலிருந்து நாம் திசைதிருப்ப பட்டுள்ளோம்.

ஆகவே ஊழியர் விடயத்தினை விடவும் நிஷாந்த சில்வாவினால் தான் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடி எதிர்காலத்தில் ஏற்படவுள்ளது” என்று கூறியுள்ளார்.

பகிரவும்...