Main Menu

சுதந்திர கட்சி பலமிழந்துமைக்கு சந்திரிகா பொறுப்பு கூற வேண்டும் : தயாசிறி

ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து விலகி வரலாற்று சாதனை மிக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஸ்தாபித்த எஸ்.டபில்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் புதல்வியான சந்திரிகா குமாரதுங்க ஐ.தே.கவை காப்பாற்ற செயற்படுகின்றமை கவலையளிப்பதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, தற்போது சுதந்திர கட்சி பலமிழந்து மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைக்கும் ஆலோசகர் என்ற ரீதியில் சந்திரிகா குமாரதுங்க பொறுப்பு கூற வேண்டும் குறிப்பிட்டார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1981 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கட்சியிலிருந்து பிரிந்து சென்று செயற்பட்டிருந்தாலும் மீண்டும் சுதந்திர கட்சியை கட்டியெழுப்புவதற்கு பாடுபட்டார்.

 அந்த வகையில் அவர் மீது எமக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியுடன் அவரது தந்தைக்கு ஏற்பட்ட கொள்கைரீதியான முரண்பாடுகளால் அவர் கட்சியை விட்டு நீங்கி செயற்பட்டமைக்கு எதிர்மாறாக தற்போது சந்திரிகா குமாரதுங்க செயற்படுகின்றார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் இருவருக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் காணப்பட்டன.

அவற்றின் காரணமாகவே கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராகக் களமிறக்குவதில் சந்திரிகா குமாரதுங்க முன்னின்று செயற்பட்டார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அன்று அவர் எடுத்த தீர்மானம் பிழையானது என்பதை தற்போது அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அந்த முடிவுதான் இன்று சுதந்திர கட்சியை சிதைத்து பலம் அற்றதாக்கி மூன்றாம் நிலைக்கு தள்ளியுள்ளது. கட்சியின் ஆலோசகர் என்ற வகையில் அவர் இதற்கு பொறுப்பு கூற வேண்டும். அத்தோடு சுதந்திர கட்சியின் ஸ்தாபகத் தலைவரின் புதல்வியாக இருந்து கொண்டு கட்சியை அழிக்கும் வகையில் சந்திரிகா செயற்படுவது உண்மையில் கவலையளிக்கிறது.

எவ்வாறிருப்பினும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவது உறுதியாகும். அவர் வெற்றி பெற்றதன் பின்னர் சுதந்திர கட்சியிலிருந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவியவர்கள் மீண்டும் எம்முடன் இணைவார்கள். தற்போது ஐ.தே.கவுடன் இணைபவர்கள் பணத்திற்கு விலை போயுள்ளனர். எதிர்காலத்தில் இந்த நிலைமை மாற்றமடையும்.

எல்பிட்டி தேர்தல் விடயங்களில் சந்திரிகா குமாரதுங்கவை இணைத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் எம்மீது குற்றஞ்சாட்டியிருக்கிறார். எனினும் அது தொடர்பாக கூட்டப்பட்ட மத்திய குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தும் அவர் அதில் கலந்து கொள்ளவில்லை. எனவே எம்மீது வீண் பழி சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் இதன்போது தெரிவித்தார்.

பகிரவும்...