Main Menu

சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி எந்தவொரு பெரும் பான்மை இன தலைவரும் வெல்ல முடியாது – விஜயகலா

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, தன்னுடைய வாக்குகளை இருபது வீதத்திலிருந்து தான் எண்ணப் போகிறார் என்பது எங்களுடைய மகிழ்ச்சியான செய்தி என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று வவுனியாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வாக்களித்து விட்டார்கள் என்பதை தான் நான் முதற்கட்டமாக இந்த இடத்திலே கூற விரும்புகிறேன். யார் எந்த முடிவெடுத்தாலும் தமிழ் பேசுகின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வவுனியா மாவட்டம் அல்ல வடக்கு, கிழக்கு முதல் மலையகம் தொடக்கம் கொழும்பு வாழ் மக்கள் வரை மூவின மக்களுமே சரியான முடிவை எடுத்துள்ளார்கள். 

எங்களுடைய வாக்குகள் அனைத்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராகிய சஜித் பிரேமதாசவிற்கு தான். அதிலும் வடக்கு, கிழக்கு, மலையக மக்களுடைய வாக்குகள் சஜித் பிரேமதாசவிற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. நூற்றுக்கு இருபது வீதமான வாக்கை நாங்கள் அளித்து விட்டோம். அவர் இந்த தேர்தலில் போட்டியிடும் நிலையில் தன்னுடைய வாக்குகளை இருபது வீதத்திலிருந்து தான் எண்ணப் போகிறார் என்பது எங்களுடைய மகிழ்ச்சியான செய்தி. 

ஏனென்றால் கடந்த கால அரசாங்கம் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து எந்த வித அபிவிருத்தியையோ அல்லது இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினையோ எதனையுமே செய்து காட்டவில்லை, நிரூபிக்கவில்லை. சிறுபான்மை மக்களின் வாக்குகள் இன்றி எந்தவொரு பெரும்பான்மை இன தலைவரும் வெல்ல முடியாது என்பது வரலாறு என குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...