Main Menu

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 5 பொலிஸார் பணி இடைநீக்கம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான மேலும் 5 பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடியினரால் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து சப் இன்ஸ்பெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி – சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி கடை திறந்து வைத்ததாக கூறி  பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.

இதனையடுத்து, கோவில்பட்டி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக 10 பொலிஸார் கைது செய்யப்பட்டனர். மேலும், சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் சாத்தான்குளம் பொலிஸ் நிலையம், அரசு வைத்தியசாலை, கோவில்பட்டி சிறைச்சாலை உள்ளிட்டவற்றில் விசாரணை நடத்தி பல்வேறு ஆவணங்களை சேகரித்தனர்.

இதற்கிடையே, இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதன்படி, இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில், சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்ய நெல்லை விருந்தினர் மாளிகையில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அறை எண் 5இல் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...