Main Menu

சாட்சியங்கள் இல்லாத தகவல்களை முன்வைக்க வேண்டாம்- கபே அமைப்பு அபேட்சகர்களுக்கு வேண்டுகோள்

சாட்சியங்கள் இல்லாத தகவல்களை முன்வைக்க வேண்டாமென பொதுத்தேர்தலில் களமிறங்கியுள்ள அபேட்சகர்களுக்கு கபே அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஆதவன் செய்தி பிரிவுக்கு வழங்கிய நேர்காணலிலேயே கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த நேர்காணலில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல் காலப்பகுதியில் பொய்யான பிரசாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இல்லாத பிரசாரங்கள் அதிகளவு பேசப்படுகின்றன.

இவ்வாறு சாட்சியங்கள் இல்லாத விடயங்களை தேர்தல் மேடைகளிலும் அதேபோன்று சமூக வலைத்தளங்களின் ஊடாகவும் முன்வைக்கின்றப்போது வாக்காளர்களின் மனோநிலை திருப்பப்படுவதாகவும்  அதாவது இனபேதங்கள், மத பேதங்கள் மற்றும் குல பேதங்கள் உண்டாக்கப்பட்டு தேர்தல் வன்முறைக்கு இட்டுச் செல்லக்கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது.

தேர்தல் மேடைகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றின் ஊடாக பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் ஞாபகம் வைத்து சில அபேட்சகர்கள் சில அரசியல் கட்சிகளுக்கு குத்தகம் விளைவிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுட்டு இருக்கும் ஒரு திட்டமிட்ட செயற்பாட்டை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

அதனூடாக தேர்தலில் வெறுப்பூட்ட கூடிய பேச்சுகள் தேர்தல் மேடைகளில் அதிகரித்து வருவதனால் வன்முறைகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது.

ஆகையினால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும் உள்ள பிரதானிகள் செய்ய வேண்டிய விடயம் என்னவென்றால், தங்களது கட்சிகளின் அபேட்சகர்கள் தேர்தல் மேடைகளில் இவ்வாறு உரையாற்றும்போது அவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதனை அவதானிக்க முடியவில்லை.

கடந்த தேர்தல் காலத்திலும் சமூக ஊடகங்களில் பொய்யான பிரசாரங்கள் அதிகளவு மேற்கொள்ளப்பட்டது. ஆகையினால் தேர்தல் முடியும் வரையும் முடிந்த பின்னரும் தேர்தல் மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் ஆதாரமற்ற பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டாமென அனைத்து அபேட்சகர்களுக்கும் கபே அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...