Main Menu

சமூகங்களுக்கிடையில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு – மனித உரிமைகள் ஆணைக்குழு

உலகலாவிய ரீதியில் அண்மைக்காலமாக சமுதாயப்பிளவுகள் அதிகரித்து பிரிவினை உருவாகிவரும் போக்கு காணப்படுகின்றது. அத்தகைய சவாலுக்கு இலங்கையும் முகங்கொடுத்துள்ளது.

எனவே இந்த சவாலை எதிர்கொண்டு சமூகங்களின் மத்தியில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உண்டு என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் கலாநிதி தீபிகா உடகம வலியுறுத்தினார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு ‘வார்த்தைகள், மனதைக் காயப்படுத்தும் வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பான இளைஞர்களின் பிரதிபலிப்புக்கள்’ என்ற தொனிப்பொருளில் நிகழ்வொன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இன்று  கொழும்பிலுள்ள சர்வதேசத் தொடர்புகள் மற்றும் இராஜதந்திரக் கற்கைகளுக்கான லக்ஷ்மன் கதிர்காமர் கற்கை நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்நிகழ்வில் அறிமுக உரையாற்றிய போதே ஆணைக்குழுவின் தவிசாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

உலகலாவிய ரீதியில் ஒவ்வொரு சமூகங்களின் மத்தியிலும் பல்வேறு வேறுபாடுகள் காணப்பட்டாலும் கூட அவை பிரச்சினைக்குரியவை அல்ல. மாறாக ஒவ்வொரு பிரிவினதும் தனித்துவத்தைக் கொண்டாடுவதற்குரிய அடிப்படையை அவையே வழங்குகின்றன.

நாடொன்றின் ஆட்சி நிர்வாகத்தை எடுத்துக்கொண்டால், அங்கு மக்கள் அனைவருக்கும் பிரிக்கப்படாத அல்லது வேறுபடுத்தப்படாத பொதுவான மனித உரிமைகள் வழங்கப்பட்டு, அவை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

மக்களுக்கான பொருளாதார மற்றும் சமூக வசதிவாய்ப்புக்களை விடவும் மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகின்றமைக்கே முதலிடம் வழங்கப்பட வேண்டும் என்று உலகின் சில நாடுகள் கூறுகின்றன. மேலும் சில நாடுகள் அதற்கு எதிரான கொள்கையைக் கொண்டவையாக இருக்கின்றன.

தற்போது உலகளவில் நிறவெறிக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுதல், பெரும்பாலான நாடுகளில் பெண்கள் உள்ளிட்ட நாட்டுமக்கள் அனைவருக்குமான சர்வசன வாக்குரிமை வென்றெடுக்கப்பட்டிருத்தல் போன்றவை அடையப்பட்டிருந்தாலும் கூட, அதனால் மாத்திரம் நாம் திருப்தியடைந்து விடமுடியாது. ஏனெனில் மனித உரிமைகள் சார்ந்து இன்னமும் அடையப்பட வேண்டியவை விடயங்கள் உள்ளன.

உலகலாவிய ரீதியில் அண்மைக்காலமாக சமுதாயப்பிளவுகள் அதிகரித்து பிரிவினை உருவாகிவரும் போக்கு காணப்படுகின்றது. அத்தகைய சவாலுக்கு இலங்கையும் முகங்கொடுத்துள்ளது. எனவே இந்த சவாலை எதிர்கொண்டு சமூகங்களின் மத்தியில் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டிய கடப்பாடு எம்மனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

பிரிவினைகளின் ஓரங்கமாக தற்போது அதிகரித்துவரும் வெறுப்புணர்வுப் பேச்சுக்களைக் கட்டுப்பட்டுத்துவதற்கான பொறுப்பும், வல்லமையும் இளைய சமுதாயத்திடம் உண்டு. அவர்களுடைய துடிப்புடனான ஆற்றலின் ஊடாக அதனைச் சாதிக்க முடியும்.

ஆகையினாலேயே இம்முறை சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்நிறுத்திய எமது தொனிப்பொருளாக ‘வார்த்தைகள், மனதைக் காயப்படுத்தும் வெறுக்கத்தக்க பேச்சு தொடர்பான இளைஞர்களின் பிரதிபலிப்புக்கள்’ என்பதை நிர்ணயித்திருக்கின்றோம்.

பகிரவும்...