Main Menu

சபரிமலைக்கு வரும் பெண்களை திருப்பி அனுப்ப கேரளா போலீஸ் முடிவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி 66 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதேசமயம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு அவர்கள் எந்த தடையும் விதிக்கவில்லை.

இந்த நிலையில் 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மண்டல பூஜைக்காக இன்று (16-ந்தேதி) மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி சாமி தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் முன்பதிவு செய்து உள்ளனர். பெண்கள் ஆர்வலரான திருப்தி தேசாயும் சபரிமலை வர உள்ளதாக அறிவித்து உள்ளார்.

பினராயி விஜயன்

இந்த சூழ்நிலையில் சபரிமலைக்கு வரும் இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் உள்ள குழப்பங்கள் பற்றி அரசு தலைமை வக்கீலுடன் ஆலோசனை நடத்திய பிறகு இளம்பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது பற்றி முடிவு செய்வோம் என தெரிவித்தார்.

அதன்படி பினராயி விஜயனை நேற்று அரசு தலைமை வக்கீல் சந்தித்து பேசினார். வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளதால் இளம்பெண்களை இந்த முறை சபரிமலையில் அனுமதிக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததற்கு இணையாகவே தீர்ப்பை கருதலாம் என ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் சபரிமலை வரும் பெண்களுக்கு இந்த முறை பாதுகாப்பு வழங்குவது இல்லை என்ற முடிவை கேரள அரசு எடுத்துள்ளது. இந்த முடிவை கேரள தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் நேற்று அறிவித்தார். அவர் கூறும்போது, சபரிமலை கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சாமி தரிசனத்திற்கு வந்தால் கடந்த ஆண்டு போல் போலீஸ் பாதுகாப்பு வழங்க மாட்டோம். தனிப்பட்ட முறையில் மலை ஏற வரும் பெண்கள் நீதிமன்றத்தின் உத்தரவுடன் வர வேண்டும். சுய விளம்பரத்திற்காக சபரிமலை வரப்போவதாக அறிவித்து உள்ளவர்களை கேரள அரசு ஒருபோதும் ஆதரிக்காது என்றார்.

அதேப்போல ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் சபரிமலை விவகாரம் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு வரும் வரை சபரிமலை கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க தேவை இல்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு மகர விளக்கு பூஜையின்போது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த மாநில அரசு கடும் முயற்சி மேற்கொண்டது. பக்தர்கள் எதிர்ப்பையும் மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பிந்து, கனகதுர்கா ஆகிய 2 இளம்பெண்களை சபரிமலை கோவிலுக்கு அழைத்துச் சென்று அவர்களை சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டது. இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பாராளுமன்ற தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தல்களிலும் சபரிமலை விவகாரம் ஆளும் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது.

இதுபோன்ற காரணங்களாலும், பக்தர்கள் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டாம் என்று கருதியும் இந்த முறை முதல்-மந்திரி பினராயி விஜயன் சபரிமலை விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு உள்ளார்.

இன்று சபரிமலை கோவில் நடை திறப்பை யொட்டி அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பெண் கமாண்டோ போலீசார் உள்பட 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்கள் 5 கட்டமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். அதன்பிறகு அரசு பஸ்கள் மூலம் அவர்கள் பம்பை செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதனால் நிலக்கல்லில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வந்தால் அவர்களை நிலக்கல்லிலேயே போலீசார் தடுத்து நிறுத்த முடிவு செய்து உள்ளனர். அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கி திருப்பி அனுப்பவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதனால் நிலக்கல்லில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

கடந்த ஆண்டு சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு இந்த முறை அமல்படுத்த மாட்டாது என்று பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.

கேரள அரசின் தேவசம் போர்டு தலைவராக இருந்த பத்மகுமார் பணிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து நேற்று புதிய தேவசம்போர்டு தலைவராக வாசு பதவியேற்றுக் கொண்டார். அவர் கூறியதாவது-

சபரிமலையில் சமாதானத்தை கெடுப்பதற்கு ஒரு போதும் இனி தேவசம்போர்டு அனுமதிக்காது. கடந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகளை யாரும் மறக்க முடியாது. 52 வயது கொண்ட பெண்ணை தேங்காய் கொண்டு எறிந்ததும், இருமுடி கட்டு இல்லாமல் 18-ம் படியில் ஏறியதும், சன்னிதான போலீஸ் நிலையம் மீது கல் எறிந்த நிகழ்வுகளையும் மறக்க முடியாது.

பெண்களை கோவிலில் அனுமதிப்பது தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு சுப்ரீம் கோர்ட்டு மாற்றி உள்ளது. இதனை நாங்கள் தற்காலிக தடையாகவே பார்க்கிறோம். 7 நீதிபதிகள் அமர்வு கொடுக்கும் இறுதி தீர்ப்பை நடைமுறைப்படுத்துவோம். இந்த முறை சபரிமலையில் பிரச்சினை எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பகிரவும்...