Main Menu

சஜித்தைவிட ரணில் தகுதியானவர் – கலாநிதி விக்கிரமபாகு

ஜனாதிபதி தோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகளை பார்க்கின்ற பொழுது எதிர்வரும் காலங்களில் பாசிசவாத ஆட்சி முறை என்றால் என்பது தொடர்பில் மக்கள் தெரிந்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்த நவ சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன  எதிர்கட்சி தலைவராக செயற்படுவதற்கு சஜித் பிரமேதாசவை விட ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமானவர் என்றும்  கூறியுள்ளார்.

கிருலப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் இன்ற இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, 

ஜனாதிபதி கோத்தாபயவின் செயற்பாடுகளை நாம் பார்கின்ற போது எதிர்வரும் காலங்களில் மக்கள் பாசிசவாத ஆட்சிமுறை என்றால் என்ன என்பதையும் தெரிந்துக் கொள்ளக் கூடியதாக இருக்கும். 

இவ்வாறான நிலையில் நாட்டின் தலைவர்கள் அனைவரும் நியாயமான ஆட்சியை நிலைநாட்டுவதற்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். 

ஐக்கிய தேசிய கட்சியின் தோல்விக்கு காரணம், அதன் தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களின் போது முட்டாள் தனமாக செயற்பட்டதே. ஆனால் பல இலட்சம் மக்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்துள்ளனர். அவர்களை பாதுகாக்க வேண்டியது எமது பொறுப்பாகும். 

இந்நாட்டில் பல சிக்கல்களை எதிர்நோக்கி வரும் சிறுபான்மையின மக்கள் மத்தியில் எமக்கு பெரும் வரவேற்பு கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்களை பாதுகாக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.அவர்கள் தமக்கான பாதுகாப்பை யார் ஏற்படுத்தி கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.

இந்நிலையில் தலைவர்கள் மக்களை கருத்திற் கொள்ளாது தப்பிச் செல்வது பெரும் தவறாகும்.எதிர்கட்சித்தலைவராக செயற்படக்கூடிய தகுதி ரணில் விக்கிரமசிங்கவிற்கே இருக்கின்றது. அவர் ஒரு லிபரல் வாதி என்பதுடன் சிறந்த கல்விமானும் ஆவார். சர்வதேசத்தில் அவருக்கு நல்ல பெயர் இருக்கின்றது.அதனால் எதிர்கட்சி தலைவராக ரணில் செயற்படுவதையே நாம் விரும்புகின்றோம்.

சஜித் பிரமதாசவை பொறுத்தமட்டில் அவர் தேசிய பிரச்சினைகள் தொடர்பாக சுயகருத்துக்களை வளர்த்துக் கொள்ளவேண்டியது அவசியமாகும். எதிர்வரும் காலங்களில் அவர் சிறந்த தலைவராக செயற்படுவார் என்று நாம் எண்ணுகின்றோம் என்றார். 

பகிரவும்...