Main Menu

கோத்தாபய ராஜபக்ஷ வழக்கிலிருந்து விடுதலை ; பயணத்தடையும் நீக்கம் !

வீரகெட்டிய, மெதமுலன டீ.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த தூபி மற்றும் நூதனசாலை நிர்மாண பணிகளுக்காக 33.9 மில்லியன் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் தொடரப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு அரச நிதியைப் பயன்படுத்தியதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வந்தது.

குறித்த வழக்கு விசாரணைகள் சம்பத் அபயகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகீ ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில் குறித்த வழக்கில் இருந்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விடுதலை செய்யப்படுவதாக, கொழும்பு விசேட நீதாய மேல் நீதிமன்ற நீதிபதிகள் சற்று முன்னர் அறிவித்துள்ளனர்.

அத்துடன் கோத்தாபயவுக்கு விதிக்கப்பட்டிருந்த‍ வெளிநாட்டு பயணம் தொடர்பான தடையும் நீக்கப்பட்டு, நீதிமன்றின் பொறுப்பிலிருக்கும் அவரது கடவுச்சீட்டை கையளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 33.9 மில்லியன் ரூபா பணத்தை நம்பிக்கை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7  பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர்  நிரந்தர விசேட மேல் நீதிமன்றில்  வழக்குத் தொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...