Main Menu

கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் ஆபத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் பல நடவடிக்கை

உலகை மிரட்டிவரும் கொரோனா வைரஸ் உலகில் 80 நாடுகளில் பரவி தீவிர நிலையை அடைந்துள்ளது.

கொவிட்-19 என்ற கொரோனா வைரஸ் இலங்கையில் பரவும் ஆபத்தைக் குறைப்பதற்கும், வைரஸ் பரவல் ஏற்பட்டால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோர், சுகாதாரத் துறையினரால் பரிசோதனை செய்யவும் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நோய்த் தொற்று தடைகாப்பு நிலையங்களை அமைத்துப் பேணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு அனைத்து நிவாரண நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதையடுத்து, அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள செயலாளர், இலங்கையை கொரோனா அச்சுறுத்தலில் இருந்து விடுதலைபெற்ற நாடாக ஆக்குவதற்கும் இயல்பு நிலையைப் பேணுவதற்கும் முடியுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சு ஏனைய தரப்பினருடன் இணைந்து வைரஸ் நாட்டில் பரவாதவாறு தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இதில் சாதகமான விளைவுகளை பெற்றுக்கொள்வதற்காக அரசாங்க நிறுவனங்களும் பொது மக்களும் இணைந்து செயற்படவேண்டியது தேசிய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் எனக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதியின் செயலாளர், வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சுமூகமாக மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் மக்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்கு மக்களின் மனோநிலையை மாற்ற வேண்டும் என அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

பெரும்பாலான நாடுகளின் நிலைமை கட்டுப்பாட்டையும் மீறிச் சென்றிருப்பதால் இலங்கையும் இதற்காகத் தயாராக இருக்க வேண்டும் என செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் ஒரு இலட்சமாக அதிகரித்துள்ளது. இந்த வைரஸால் சீனாவில் 3 ஆயிரத்து 15 இறப்புக்களும், உலகின் பிற பகுதிகளில் 267 இறப்புக்களும் பதிவாகியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...