Main Menu

கொரோனா : கட்டுப்படுத்த தவறினால், பிரித்தானிய – பிரான்ஸ் எல்லையை மூடி விடுவோம் : பிரான்ஸ் ஜனாதிபதி

பிரித்தானியா கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தவறினால், பிரித்தானியாவுடனான, பிரான்சின் எல்லையை மூடுவதாக ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அச்சுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் ஐரோப்பிய நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. அதிலும், பிரான்ஸ், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து குறிப்பாக, இத்தாலியில் கொரோனா வைரஸ் தன்னுடைய ருத்ரதாண்டவத்தை காட்டி வருகிறது.

இதனால் பிரான்ஸ் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஒரு சில நாடுகளுடனான எல்லைகளையும் மூடியுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,018 எட்டியுள்ளது. 233 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனாவின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது.

இதன் காரணமாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறினால், பிரித்தானியாவுடனான, பிரான்சின் எல்லையை வெள்ளிக்கிழமை மூடுவதாக அச்சுறுத்தியதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை, போரிஸ் ஜான்சன் பப்கள், உணவகங்கள், தியேட்டர்கள், சினிமாக்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் இடங்கள் போன்றவைகளை மூடும்படி உத்தரவிட்டார்.

மேக்ரானின் அலுவலக ஆதாரங்களை மேற்கோள் காட்டி பிரான்ஸ் செய்தித்தாள் லிபரேஷன், வெள்ளிக்கிழமை காலை பிரான்ஸ் தலைவர் அவருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததை அடுத்து ஜான்சன் முடிவுக்கு வந்ததாகவும், புதிய நடவடிக்கைகள் எதுவும் இல்லாவிட்டால் இங்கிலாந்தில் இருந்து வரும் எந்தவொரு பயணிக்கும் நுழைவு தடை விதிக்கப்படும் என்று அச்சுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து பிரபல ராய்ட்டர்ஸ் ஊடகம் தொடர்பு கொண்ட போது, மேக்ரான் அலுவலகம், கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. அதே போன்று போரிஸ் ஜானசனின் அலுவலத்தில் இருந்தும் எந்த ஒரு பதிலும் பெற முடியவில்லை என்று அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிரித்தானியா அரசு, வைரஸ் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடும்போது, ​​அதன் விஞ்ஞான ஆலோசகர்களின் வழிகாட்டுதலின் பேரில் செயல்படுவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...