Main Menu

கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு நிபந்தனையின்றி ஆதரவளித்தது – தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை

கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை அழைத்து அவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலம் இன்னும் நான்கு மாதங்களே இருக்கின்ற நிலையில் அதனை கூட்டமைப்பு சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவிக்கையில், “2015 ஆட்சி மாற்றத்திலிருந்து இன்று வரையும் எமக்கு கிடைத்த காலம் என்பது பொற்காலமாகும்.

இரா.சம்பந்தர் அடிக்கடி கூறும் விடயம், ‘இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து ஒன்றாக இருக்கும் போதுதான் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். ஆகவே இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும். இந்தக் காலகட்டத்திலே அரசாங்கத்தை யாரும் குழப்பக் கூடாது’ என்று கூறுவார்.

ஆனால் கடந்த மூன்றரை வருடங்களாக மைத்திரி, ரணில் அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுகின்றது.

இந்த 4 வருடங்களில் அரசாங்கத்துக்கு பல வழிகளில் நெருக்கடி ஏற்பட்டது. அந்த நெருக்கடியான சூழலிலும் கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு நிபந்தனையின்றி ஆதரவளித்தது. ஆனால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அரசாங்கத்தைக் கொண்டுவந்த பொற்காலத்தில் இன்னும் 4 மாதங்கள் இருக்கின்றன.

எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை அழைத்து தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை முன்னுரிமைப்படுத்தி, இந்த கால கட்டத்தில் எமது ஆதரவினை விலக்கிக் கொள்ளப் போவதாக கதைக்க வேண்டும்.  ஒரு காலக்கெடுவை விதிக்க வேண்டும். அவ்வாறு பேசுகின்றபோது சில குறைந்தபட்ச பிரச்சினைகளுக்காவது தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் கூறினார்.

பகிரவும்...