Main Menu

கூட்டமைப்பின் தலைமைத்துவம் விலக வேண்டும் என உறவுகள் போராட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர் அரசியலிலிருந்து வெளியேறி இளையவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று (புதன்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று மதியம் 12.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள், எங்கள் பிள்ளைகள் எமக்கு வேண்டும், வெளிநாடு தலையிட்டு எமக்குரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும், உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே, சர்வதேச விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு கதறி அழுது தமது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர்.

மேலும் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்கள், “போர்க்குற்றம் ஒரு சர்வதேச குற்றம். எனவே இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் அல்லது சர்வதேச தீர்ப்பாயத்தினால் விசாரிக்கப்பட வேண்டும்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர்கள் வடகிழக்குக்கு வரவேண்டும். வந்து எங்கள் துயரங்களை நேரில் பார்க்க வேண்டும்” எனவும் தெரிவித்திருந்தனர்.

பகிரவும்...