Main Menu

குருந்தூர் மலை தமிழர் வழிபாட்டு அடையாள உடைப்பு: இரு வழக்குகள் தாக்கல் செய்ய முடிவு!

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமலாக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தொடரப்படும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, அவரோடு சேர்ந்தவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றினையும் தொடரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக வழக்கொன்றினைத் தொடர்வது குறித்து, வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் இன்று சுமந்திரனுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

இந்தச் சந்திப்பு, வவுனியாவிலுள்ள தமிழரசுக் கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றதுடன், வழக்குத் தொடர்வதற்காக சில ஆவணங்களும் சுமந்திரனிடம் கையளிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், “குருந்தூர் மலையில் இருந்த சூலம் உடைக்கப்பட்ட விடயம் சம்பந்தமாக துரைராசா ரவிகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், சார்ள்ஸ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்ட பின்பு, ரவிகரன் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றார்.

அதனைத் தொடர்ந்து நேற்று பொலிஸாரோடு குருந்தூர் மலைக்குப்போய் உடைக்கப்பட்ட தடயங்கள் எல்லாவற்றையும் ரவிகரன் காண்பித்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டு இடம் உடைக்கப்பட்டமை ஊர்ஜிதமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அல்லது மேன்முறையிட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றை நாங்கள் தாக்கல் செய்யவுள்ளோம்.

ஏற்கனவே, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தினால் கொடுக்கப்பட்ட உத்தரவினை மீறிச் செயற்பட்டமை தொடர்பாக நீதிமன்றினை அவமதித்த வழக்கொன்றும் மேன்முறையிட்டு நீதிமன்றில் நாங்கள் உடனடியாகத் தாக்கல் செய்வோம். இது இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவிற்கும் அவரோடு சேர்ந்தவர்களுக்கும் எதிராக தாக்கல் செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

பகிரவும்...